தமிழ் சினிமாவின் ட்ரெண்டிங் இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் 627 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் நடிப்பில் தலைவர் 171 படத்தை இயக்க இருக்கிறார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அனிருத் இசையமைக்க போவதாகவும் ஏற்கனவே அறிவிப்புகள் வெளியாகி இருந்தது. மேலும் இதன் படப்பிடிப்புகள் 2024 ஏப்ரல் மாதத்தில் தொடங்க இருப்பதாகவும் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் அனைத்து சோசியல் மீடியாக்களில் இருந்து சிறிது காலம் பிரேக் எடுப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். அதாவது லோகேஷ் கனகராஜ் தற்போது தலைவர் 171 படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். எனவே தலைவர் 171 படத்திற்காக முழு கவனம் செலுத்த வேண்டும் என்பதால் சமூக வலைதளங்களில் சில காலம் ஓய்வு பெறுகிறார். இவர் ஏற்கனவே கமலின் விக்ரம், விஜயின் லியோ போன்ற படங்களுக்காகவும் சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருந்தார்.
தற்போது இவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், லோகேஷ் கனகராஜ் ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ள ஃபைட் கிளப் படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


