லோகேஷ் கனகராஜின் புதிய படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங் இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். கடைசியாக இவரது இயக்கத்தில் ‘கூலி’ திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் இவர், ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரையும் வைத்து கேங்ஸ்டர் படம் ஒன்றை இயக்கப் போவதாக பேச்சு அடிபடுகிறது. அடுத்தது லோகேஷ் கைதி 2, விக்ரம் 2 போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் இவர், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. அதே சமயம் தயாரிப்பாளராக வலம் வரும் இவர், பென்ஸ் படத்தை தயாரித்து வருகிறார். இவ்வாறு திரைத்துறையில் பிஸியாக பயணித்து வரும் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிக்க பல நடிகர்கள் போட்டி போடுகின்றனர். அதுமட்டுமில்லாமல் ரசிகர்களும் விஜய், கமல், ரஜினியை இயக்கிய லோகேஷ் அடுத்தது அஜித்தை எப்போது இயக்குவார்? என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் லோகேஷ் கனகராஜ், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமீர்கானை நேரில் சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது.
அதன்படி லோகேஷ், அமீர்கான் நடிப்பில் சூப்பர் ஹீரோ படம் ஒன்றை பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தியது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், லோகேஷ் – அமீர்கான் கூட்டணியிலான சூப்பர் ஹீரோ படம் கைவிடப்பட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை தந்துள்ளது.