தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 18ம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மார்புச்சளி, இருமல் இருந்ததால் தேவைப்படும் நேரங்களில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் வெளியான செய்திக்கு முதலில் தேமுதிக தலைமை கழகம் மறுப்பு தெரிவித்தது.
கேப்டன் விஜயகாந்த் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக சென்றுள்ளதாகவும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் அறிக்கை வெளியிட்டது. அதேபோல் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தாலும் அவரது உடல்நிலை சீராகவே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து 12 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென மியாட் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரது உடல்நிலை சீராக இல்லை என்றும், தொடர் சிகிச்சையில் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், விஜயகாந்த் குணமடைய பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் மன்சூர் அலிகான், விஜயகாந்த் அண்ணா விரைவில் குணமடைந்து வர வேண்டும் என கண்ணீர் மல்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அண்ணா தங்களுக்கு ஏன் இந்த சோதனை, உங்கள் மன்சூர் அழுகிறேன். காற்றிலே பறந்து கழுதை உதை உதைப்பீர்களே, எப்போது வந்து உதைப்பீர்கள். மதுரை மீனாட்சி அம்மன் தூண்கள் போன்று இருக்கும் கால்கள் மெலிந்தேனோ மன்னவனே. யாரோ தவறாக வீடியோவை கட் செய்து அனுப்பிவிட்டனர். கடவுளிடம் தண்ணிக்கப்பட வேண்டியவர்கள் இங்கு உள்ளனர். கருப்பு எம்.ஜி.ஆரே. நலமுடன் திரும்ப வேண்டும்.. தாங்களிடம் அடி வாங்க காத்திருக்கும் தம்பி மன்சூர் அலிகான், என்று குறிப்பிட்டுள்ளார்.