மிர்ச்சி சிவா நடித்துள்ள சுமோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மிர்ச்சி சிவா நடிப்பில் கடைசியாக சூது கவ்வும் 2 திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அடுத்தது இவர் கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு ஆகிய படங்களை இயக்கிய ராம் இயக்கத்தில் பறந்து போ எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதற்கிடையில் இவர் சுமோ என்ற படத்தில் நடித்துள்ளார். காமெடி கலந்த கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க எஸ்.பி. ஹோசிமின் இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சிவாவுடன் இணைந்து பிரியா ஆனந்த், விடிவி கணேஷ், யோகி பாபு, சதீஷ், நிழல்கள் ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர். ராஜீவ் மேனன் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க நிவாஸ் கே பிரசன்னா இதற்கு இசையமைத்திருக்கிறார். இதன் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட இந்த படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இப்படம் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 25ஆம் தேதி இந்த படம் திரைக்கு வரும் என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.