பிச்சைக்காரன் 2 திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் நடிகர் விஜய் ஆண்டனி பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகவுள்ள பிச்சைக்காரன் 2 படத்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னையைச் சேர்ந்த ராஜ கணபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில் தன் தயாரிப்பு நிறுவனம் மாங்காடு மூவீஸ் தயாரிப்பில் நடிகரும், இயக்குருமான ஆர்.பாண்டியராஜன் நடிப்பில் மூளை என்ற பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் பின்னர் ஆய்வுக்கூடம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்த படத்துக்கு கடந்த 2014-ம் ஆண்டு தணிக்கைச்சான்றிதழ் பெறப்பட்டு, 2016-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்தப் படத்தின் கருவானது மூளை மாற்று அறுவைச் சிகிச்சை தொடர்புடையது.
தற்போது தனது ஆய்வுக்கூடம் படத்தின் கதை மற்றும் திரைக்கதையை அப்படியே காப்பியடித்து நடிகர் விஜய் ஆண்டனி ‘பிச்சைக்காரன் -2’ என்ற படத்தை எடுத்துள்ளார். அதன் டிரெய்லர் கடந்த பிப்ரவரி மாதம் 10ம் தேதி அன்று வெளியானது.
இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. எங்களது அனுமதியின்றி ஆய்வுக்கூடம் படத்தின் கதையை மையமாக வைத்து விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் -2 படத்தை எடுத்துள்ளதால் இப்படத்தை எந்த தளங்களிலும் வெளியிடக்கூடாது என தடை விதிக்க வேண்டும்.
அத்துடன் 10 லட்சத்தை நஷ்ட ஈடாக வழங்கவும் உத்தரவிட வேண்டும், என கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர். மகேஸ்வரி ஆஜராகி வாதிட்டார்.
அதையடுத்து நீதிபதி இதுதொடர்பாக விஜய் ஆண்டனி வரும் ஏப்ரல் மாதம் 12-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.