கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படம் வெளியானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலாநிதி மாறன் இந்த படத்தை தயாரித்திருந்தார். அனிருத் இந்த படத்தின் இசையமைப்பாளராகவும் கிரிஷ் கங்காதரன் இதன் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருந்தனர். அதிரடி ஆக்ஷன் படமாக வெளியான இந்த படத்தில் ரஜினி, தேவா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடன் இணைந்து நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், சௌபின் சாகிர், உபேந்திரா, அமீர்கான், ரச்சிதா ராம் மற்றும் பலர் நடித்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உலகம் முழுவதும் வெளியான இந்த படம் ஜெனரல் ஆடியன்ஸ் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனால் ரஜினி ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகிறார்கள். மேலும் இப்படம் வெளியான முதல் நான்கு நாட்களில் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் அதன் பின்னர் இந்த படத்தின் வசூல் நாளுக்கு நாள் குறைய தொடங்கியது.
ஏனென்றால் ஆரம்பத்திலேயே ‘கூலி’ படத்தில் வன்முறை காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் இந்த படத்திற்கு தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கி இருந்தது. ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டிருந்ததால் இந்த படத்தை ரசிகர்கள் குழந்தைகளுடனும், குடும்பத்துடன் பார்க்க முடியாத நிலை உண்டானது. எனவே இந்த படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கும்படி சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டிருந்தது. இந்த மனு தற்போது விசாரணைக்கு வந்த நிலையில் இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் வன்முறை காட்சிகளை நீக்கினால் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்குவதாக சி.பி.எப்.சி வாதிட்டது. ஆனால் படக்குழு இதனை மறுத்ததால் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- Advertisement -