நடிகை பூஜா ஹெக்டே புதிய படத்தில் நடனமாட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகை பூஜா ஹெக்டே தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் தமிழில் மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான ‘முகமூடி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து விஜயின் ‘பீஸ்ட்’, சூர்யாவின் ‘ரெட்ரோ’ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ‘ஜனநாயகன்’ படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இது தவிர இவர், துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் நானியுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கப் போவதாகவும் பேச்சு அடிபடுகிறது.
இதற்கிடையில் இவர் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி ரஜினி நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படத்தில் ‘மோனிகா’ பாடலுக்கு நடனமாடி இருந்தார். இந்த பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து நடிகை பூஜா ஹெக்டே, டாப் நடிகர் ஒருவரின் புதிய படத்தில் நடனமாட இருக்கிறார் என்று புதிய தகவல் கிடைத்துள்ளது. அதாவது அல்லு அர்ஜுன் – அட்லீ கூட்டணியில் உருவாகும் பிரம்மாண்ட பட்ஜெட் படத்தில் ஸ்பெஷல் பாடல் ஒன்றுக்கு நடனமாட இருக்கிறாராம் பூஜா ஹெக்டே.
ஏற்கனவே பூஜா ஹெக்டே, அல்லு அர்ஜுன் உடன் இணைந்து ‘அல வைகுந்தபுரமுலு’ படத்தில் நடித்திருந்த நிலையில் அந்த படத்தில் இடம்பெற்ற ‘புட்ட பொம்மா’ பாடல் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. எனவே பூஜா ஹெக்டே, மீண்டும் அல்லு அர்ஜுன் படத்தில் நடனமாட இருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தி உள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த பிரம்மாண்ட பட்ஜெட் படம் ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படமானது 2027 பொங்கலுக்கு திரைக்கு வரும் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.


