பிரபாஸ் நடிக்கும் தி ராஜா சாப் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.
நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்திற்கு பிறகு பான் இந்திய நடிகராக உருவெடுத்துள்ளார். அந்த வகையில் தொடர்ந்து பல பான் இந்தியா படங்களில் நடித்து வருகிறார். இருப்பினும் சில படங்கள் பிரபாஸுக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. ஆனால் சமீபத்தில் வெளியான கல்கி 2898AD திரைப்படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்திருக்கிறார் பிரபாஸ். கடந்த ஆண்டு வெளியான சலார் திரைப்படத்தை விட இந்த படம் அதிக வசூலை பெற்றுத்தந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. அதாவது கிட்டத்தட்ட 1100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. இதைத்தொடர்ந்து பிரபாஸ், மாருதி இயக்கத்தில் தி ராஜா சாப் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபாஸுடன் இணைந்து மாஸ்டர், தங்கலான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மாளவிகா மோகனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் நிதி அகர்வால், ரித்தி குமார் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்க படத்திற்கு தமன் இசை அமைக்கிறார்.
ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த வீடியோவில் படமானது ஹாரர் ரொமான்டிக் காமெடி கதைக்களத்தில் உருவாகி வருவதாக தெரிவித்துள்ளனர். அடுத்ததாக இப்படம் 2025 ஆகஸ்ட் 10ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.