தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்- தேனாண்டாள் முரளி வெற்றி
தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட்ட தேனாண்டாள் முரளி 150 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் நேற்று நடைபெற்ற முடிந்த நிலையில் இன்று காலை 10 மணி முதல் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. இத்தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் வெங்கட்ராமன் மற்றும் பாரதிதாசன் ஆகியோர் பணியாற்றினர்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் போட்டிக்கு தயாரிப்பாளர் நலம் காக்கும் அணி தேனாண்டாள் முரளி மற்றும் தயாரிப்பாளர் உரிமை காக்கும் அணி தயாரிப்பாளர் T.மன்னன் ஆகிய இரு அணிகள் போட்டியிட்டனர். ஒரு தலைவர், இரண்டு துணைத்தலைவர், ஒரு பொருளாளர், இரண்டு பொதுச்செயலாளர்கள் 26 செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. காலை 9 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி 5 மணியளவில் முடிவுற்றது. இதில் தயாரிப்பாளர் தேனானாண்டாள் முரளி ஒரு அணியாகவும் தயாரிப்பாளர் மன்னன் ஒரு அணியாகவும் போட்டியிட்டனர்.

தற்போது தயாரிப்பாளர் சங்கத்தேர்தலில் போட்டியிட்ட தேனாண்டாள் முரளி 150 வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஏற்கனவே தயாரிப்பாளர் சங்கத் தலைவராக தேனானாண்டாள் முரளி தலைவராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேனாண்டாள் முரளி, “எனக்கு வாக்களித்த அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. இது என்னுடைய இரண்டாவது தேர்தல், இதில் எனக்கு நம்பிக்கை வைத்து வாக்களித்து என்னை வெற்றி பெற வைத்த அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டாவது முறையாக மிகப்பெரிய பொறுப்பை கொடுத்திருக்கிறார்கள். தமிழ்நாடு அரசை அணுகி கேட்ட கோரிக்கைகளுக்கு முதல்வர் மானியங்கள் எல்லாம் வழங்கினார். அதற்காக அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா தயாரிப்பாளர்களுக்கும் இந்த அரசின் மீது நம்பிக்கை வந்துள்ளது” என்றார்.


