தமிழ் சினிமாவின் குழந்தை நட்சத்திரமாக இருந்து முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியவர் சிம்பு. இவர் நடிகர் மற்றுமின்றி இயக்குனர், நடன இயக்குனர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்டவர். சினிமா துறையின் பல்வேறு தயாரிப்பாளர்கள் இவர் மீது குற்றச்சாட்டை வைத்து சில காலம் சினிமாவில் இவரால் நடிக்க முடியாமல் போனது. பின்னர் நீண்ட நாட்களுக்கு பிறகு சினிமாக்களில் தொடர்ந்து நடிக்க தொடங்கினார். அந்த வரிசையில் இவருக்கு செக்கச் சிவந்த வானம் ஹிட் படமாக அமைந்தது. வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளிவந்த மாநாடு திரைப்படம் மிகப்பெரிய கம்பேக் திரைப்படமாக அமைந்தது. இப்படத்திற்காக உடல் எடையை நன்றாக குறைத்து ஸ்லிம்மாக மாறினார். தரமான கதையும், சிம்பு மற்றும் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு படத்திற்கு மேலும் வலு சேர்த்தன. இதைத்தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்திலும் நடித்திருந்தார் சிம்பு. ஏ ஆர் ரகுமான் இசையில் உருவான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்தது. அதன் பின் வெளிவந்த பத்து தல கலவையான விமர்சனங்களை பெற்று ஓரளவு வெற்றி படமாக மாறியது. இந்நிலையில் தான் இவர் அடுத்ததாக இயக்குனர் தேசிங்கு பெரிய சாமியின் இயக்கத்தில் STR48 ல் நடிக்கவுள்ளார். துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கியவர் தான் தேசிங்கு பெரியசாமி.
இப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. அடுத்ததாக இவர் யாரை வைத்து படம் இயக்க போகிறார் என்ற ஆர்வமும் தொற்றிக்கொள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக கதை ஒன்றை எழுதியுள்ளார் தேசிங்கு பெரியசாமி. ஒரு வரலாற்றுப் பின்னணியில் இக்கதை அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சில காரணங்களால் இப்படத்தில் ரஜினி நடிக்க முடியவில்லை. எனவே கதையில் சிம்புவை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்யப்பட்டு பிரீ ப்ரோடுக்ஷன் வேலையும் தொடங்கப்பட்டு மும்முரமாக நடைபெற்று வருகிறது.STR48 என அழைக்கப்படும் இப்படத்தை கமலஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த சூழலில் தான் நடிகர் ரஜினி இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை வாழ்த்தியுள்ளார். அவர் தேசிங்கு பெரியசாமியிடம் “சூப்பரா பண்ணுங்க… நல்லா பண்ணுங்க.. ஆல் தி பெஸ்ட்” என்று வாழ்த்தியுள்ளார். இச்செய்தியை தேசிங்கு பெரியசாமி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த படத்தின் பிரீ ப்ரோடுக்ஷன்ஸ் வேலை அதிகமாக உள்ளதாகவும், இப்படத்திற்காக சிம்பு மிக தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபட்டு தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளார் எனவும் கூறியுள்ளார். மேலும் சிம்பு ஒரு ஆற்றல் படைத்த நல்ல மனிதர், இந்த கதையில் அவர் எந்த ஒரு திருத்தத்தையும் மேற்கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார். இதுவரை இப்படத்தின் அறிவிப்பு வீடியோ ஒன்று மட்டுமே வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் யார் யார் இணைகின்றனர் என்பது பற்றிய தகவல்களும் அடுத்தடுத்து வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -