ரோபோ சங்கர் நாளை வீடு திரும்பவார் என குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ரோபோ சங்கர், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வாயை மூடி பேசவும், மாரி ஆகிய படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்து பெயர் பெற்றுள்ளார். அதே சமயம் இவர் கெளதம் வாசுதேவ் மேனன், தர்ஷன் ஆகியோருடன் இணைந்து ‘காட்ஸ்ஜில்லா’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் (செப்டம்பர் 16) பூஜையுடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்றது. அப்போது படப்பிடிப்பில் இருந்த போது ரோபோ சங்கருக்கு நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் அவரை சென்னை சாலிகிராமத்தில் உள்ள சூர்யா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அதன் பின்னர் துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் ரோபோ சங்கர் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர். அதே சமயம் ரோபோ சங்கரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக பல வதந்திகள் பரவி வருகிறது. இந்நிலையில் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, தனது தந்தை சுயநினைவோடு தான் இருக்கிறார் என்றும் குறைந்த ரத்த அழுத்தமே இதற்கு காரணம் எனவும் தெரிவித்திருக்கிறார். மேலும் சிகிச்சை முடிந்து நாளை மாலைக்குள் வீடு திரும்பி விடுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


