நடிகை சாய் பல்லவி, அமரன் திரைப்படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார்.
ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாய் பல்லவி மலையாளத்தில் வெளியான பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். தொடர்ந்து இவர் தமிழில் மாரி 2, என் ஜி கே உள்ளிட்ட பல படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். மேலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளிலும் நடித்துள்ளார் சாய் பல்லவி. அடுத்ததாக இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அமரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கிறார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படமானது மறைந்த ராணுவ வீரர் முகுந்து வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே இதன் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் டப்பிங் பணிகளும் படத்தின் பின்னணி வேலைகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நடிகை சாய் பல்லவி அமரன் திரைப்படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளதாக அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். எனவே இப்படமானது வருகின்ற 2024 அக்டோபர் 31 தீபாவளி தினத்தன்று திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.