நடிகர் சிவகார்த்திகேயன் கல்வி விழாவில் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக உரையாற்றி உள்ளார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது ‘பராசக்தி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இன்னும் சில படங்களில் கமிட்டாகி வரும் சிவகார்த்திகேயன், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த தமிழக அரசின் கல்வி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் சில விஷயங்களை பேசி உள்ளார். அதன்படி அவர், “திரைப்பட விழாவில் எதை வேண்டுமானாலும் பேசிவிட்டு போய்விடலாம். ஆனால் கல்வி விழாவில் அப்படி பேச முடியாது. இங்கே நாம் பேசுகின்ற வார்த்தை ஒவ்வொன்றும் ரொம்ப ரொம்ப முக்கியம். உலகில் நாம் எதையெல்லாம் பெரிய செல்வம் என்று நினைக்கிறோமோ அதைவிட கல்விதான் மிகப்பெரிய செல்வம். நான் படிக்கும்போது மூன்று வேலை சாப்பிட்டு ஸ்கூலுக்கு போவேன். என்னுடைய அப்பா ஒருவேளை சாப்பிட்டு ஸ்கூலுக்கு போனதால்தான் அது நடந்தது. என் அப்பா நடந்து ஸ்கூலுக்கு போனதால் தான் நான் ஆட்டோ, ரிக்ஷா, பஸ், ட்ரெயினில் படிக்கப்போனேன். ஒரு தலைமுறை படித்தால் அடுத்த தலைமுறை வாழ்க்கை நன்றாக இருக்கும். இதை என் குடும்பத்தில் இருந்து பார்த்திருக்கிறேன். என் அப்பாவுக்கு இருந்த சூழ்நிலையால் அவரால் அவருக்கு விருப்பமான படிப்பை படிக்க முடியவில்லை.
ஆனால் அவர் என்னை இரண்டு டிகிரிகள் படிக்க வைத்தார். என் அக்கா மூன்று டிகிரிகள் முடித்தார். சினிமா என்பது மிகவும் சவாலானது. அதில் சவால்கள் வரும் போதெல்லாம் என்னுடைய இரண்டு டிகிரிகள் தான் எனக்கு தைரியம் தரும். என்னை சினிமாவை விட்டு அனுப்பினாலும் கூட நான் ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்வேன். வாழ்க்கையில் வெற்றி பெற, வாழ்க்கைக்காக அதிகம் படியுங்கள். தமிழக அரசின் இதுபோன்ற திட்டங்கள் பல சாதனையாளர்களை உருவாக்கும்” என்று தெரிவித்துள்ளார்.