தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக தன் பயணத்தை தொடங்கியவர் நடிகர் ரியோ ராஜ். இவர் சமீபகாலமாக படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, பிளான் பண்ணி பண்ணனும் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜோ என்னும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப் படத்தை புதுமுக இயக்குனர் ஹரிஹரன் ராம் இயக்கியுள்ளார். இதில் ரியோ ராஜுடன் இணைந்து மாளவிகா மனோஜ், பவ்யா த்ரிகா மற்றும் பலர் நடித்துள்ளனர். விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க சித்து குமார் இதற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் கடந்த நவம்பர் 24ஆம் தேதி வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
96 உள்ளிட்ட படங்களைப் போல உணர்வுபூர்வமான காதல் கதையை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஹரிஹரன் ராம். தொடக்கத்தில் காமெடி படமாக சென்றாலும் முடியும் போது எமோஷனலாக முடிவடைகிறது. குறிப்பாக கண் கலங்க வைக்கும் இன்டர்வல் பிளாக் மற்றும் எதிர்பாராத கிளைமாக்ஸ் போன்றவை ரசிகர்களின் பாராட்டை பெறுகிறது. மேலும் பல்வேறு தரப்பினரிடையேயும் ஜோ திரைப்படம் பாராட்டுகளை பெற்று வருகிறது. அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் ரியோ ராஜ் மற்றும் ஜோ படக்குழுவினரை நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார். இது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
நடிகர் சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக தான் தன் திரை பயணத்தை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.