மதராஸி படத்தின் திரை விமர்சனம்
சிவகார்த்திகேயனின் 23 வது படமாக உருவான மதராஸி திரைப்படம் இன்று (செப்டம்பர் 5) மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உலகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. தற்போது இது குறித்த திரை விமர்சனத்தை பார்க்கலாம்.

படத்தின் ஆரம்பமே ஆக்சன் காட்சிகளுடன் தொடங்குகிறது. வட இந்திய மாஃபியாவிற்கும், தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு குழுவுக்கும் இடையில் நடக்கும் தீவிரமான, அதிரடியான கதை தான் இப்படம். இந்த படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியான பிஜு மேனன், தனக்கு உதவுவதற்காக சிவகார்த்திகேயனைத் தேர்வு செய்கிறார். ஆனால் சிவகார்த்திகேயன் காதல் தோல்வியால் ஒரு மனநல நோயாளியாக சுற்றித் திரிகிறார். இதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதி கதை. இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், நீண்ட இடைவெளிக்கு பிறகு கத்தி, துப்பாக்கி பட பாணியிலான விறுவிறுப்பான திரைக்கதையை கையில் எடுத்துள்ளார். சிவகார்த்திகேயனும் முழுமையாக ஆக்ஷன் காட்சிகளில் ஈடுபட்டு வேற லெவல் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
அதிலும் படத்தின் முதல் பாதியில் காதல், காமெடி ஆக்ஷன் என கலக்கும் சிவகார்த்திகேயனை, ஏ.ஆர். முருகதாஸ் வேறொரு பரிமாணத்தில் காட்டியுள்ளார். இன்டர்வெலின் போது தியேட்டரில் விசில் சத்தம் பறக்கிறது. சிவகார்த்திகேயன் – ருக்மினி வசந்தின் காதல் காட்சிகள் படத்தின் பிளஸ் பாயிண்டாக அமைந்துள்ளது. வித்யூத் ஜம்வால் ஸ்டைலிஷானா, மாஸான வில்லனாக அசத்தியுள்ளார். அவருடைய சண்டை காட்சிகள் செம சுவாரஸ்யமாக இருக்கிறது. இது தவிர விக்ராந்த், சபீர் கல்லாரக்கல், பிஜு மேனன் ஆகியோர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
அடுத்தது அனிருத் தனது பின்னணி இசையால் ஸ்கோர் செய்கிறார். படத்தின் மேக்கிங் ரசிகர்கள் ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. இருப்பினும் இரண்டாம் பாதியின் நீளம் தான் படத்தின் மைனஸ் ஆக அமைந்துள்ளது. மொத்தத்தில் ஏ.ஆர். முருகதாஸ் சிறந்த கம்பேக் கொடுக்க, சிவகார்த்திகேயன் மாஸ் காட்டியுள்ளார். மேலும் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இந்த படம் விருந்து படைத்துள்ளது.