நடிப்புப் பேரழகன் சூர்யாவின் பர்த்டே ஸ்பெஷல்
தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தில் தடம் பதித்து தனக்கென தனியொரு சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் கொண்டவர் நடிகர் சூர்யா.
தொடக்கத்தில் வாரிசு நடிகராக அறிமுகமாகி இருந்தாலும் அதன் பின்னர் அவருடைய நடிப்புத் திறமையால் வெற்றி நடை போட்டார். ஒவ்வொரு படத்தின் கதை தேர்விலும் இவரது மெனக்கடலும், கதாபாத்திரங்களுக்காக இவருடைய உடல் உழைப்பும் எழுத்தினால் விளக்க இயலாதது. “நேருக்கு நேர்” படத்தின் மூலம் கத்துக்குட்டியாக அறிமுகமான இவர் பேரழகன், பிதாமகன், நந்தா,கஜினி, வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் தன்னுடைய அசாதாரணமான நடிப்பால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். பல ரொமான்டிக் படங்களில் மௌனத்தால் பேசினாலும் ஆக்சன் படங்களில் சிங்கமாய் சீறி இறங்கி அடிப்பார்.
சவால்கள் நிறைந்த கதாபாத்திரங்களை தேடித்தேடி அர்ப்பணிப்போடு உழைப்பவர். சினிமாவில் மட்டுமின்றி நிஜத்திலும் விவசாயம், கல்வி, மருத்துவ ரீதியிலான நற்பணிகளையும் தொடர்ந்து செய்து வருகிறார். ‘அகரம் பவுண்டேஷன்’ எனும் அறக்கட்டளை மூலம் பல ஏழை எளிய குழந்தைகளுக்கு இலவச கல்வியை வழங்கி வருகிறார். அரசியல் பேச வேண்டிய இடங்களில் சரியாக குரல் கொடுக்கும் இவரது தைரியத்தையும் நாம் பார்த்திருக்கிறோம். இத்தகைய பெருமைக்குரிய நடிகர் சூர்யா கிட்டத்தட்ட 40-க்கும் மேலான படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
அடுத்ததாக இவரது நடிப்பில் கங்குவா திரைப்படம் வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும் சூர்யா 44 திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் இன்று (ஜூலை 23) நடிகர் சூர்யா தனது 49 வது பிறந்த நாளை கொண்டாடிவரும் நிலையில் ரசிகர்களும் திரை பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். எனவே நாமும் அவர் இன்னும் பல சாதனைகள் படைத்திட மனதார வாழ்த்துவோம்.


