இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் மற்றும் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சார்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான 22 ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த டிசம்பர் 12 முதல் 19 ஆம் தேதி வரை 8 நாட்கள் நடந்தது. இதில் தமிழ் படங்கள் இந்தியாவின் பல்வேறு மொழி படங்கள் மற்றும் பன்னாட்டு திரைப்படங்கள் திரையிடப்பட்டது. போட்டியில் வெற்றிபெற்ற படங்களுக்கு கோப்பையுடன் பரிசு தொகையும் வழங்கப்பட்டது.
இதில் தமிழ் திரைப்பட பிரிவில் அமரன், போட், புஜ்ஜி அட் அனுப்பட்டி, செவப்பி, ஜமா, கொட்டுக்காளி, கோழிப்பண்ணை செல்லதுரை, லப்பர் பந்து, மகாராஜா, மெய்யழகன், நந்தன், ரசவாதி, தங்கலான், வாழை, வெப்பம் குளிர் மழை, வேட்டையன், அயலி, டிமாண்டி காலனி 2, கருடன், ஹாட்ஸ்பாட், லாக்டவுன், நீல நிற சூரியன், பார்க்கிங், டீன்ஸ், வல்லவன் வகுத்ததடா ஆகிய 25 படங்கள் திரையிடப்பட்டது. மேலும் இந்தியன் பனோரமா பிரிவில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற தமிழ் படம் திரையிடப்பட்டது. ஈரான், ஜெர்மனி, செக் குடியரசு, தென் அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்களும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இதன் நிறைவு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

22 ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் உலக சினிமா பிரிவில் வெற்றி பெற்ற திரைப்படங்களின் பட்டியல்.
22 ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருது அமரன் படத்திற்காக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கு வழங்கப்பட்டது. மேலும் ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.
சிறந்த நடிகைக்கான விருது அமரன் படத்திற்காக நடிகை சாய் பல்லவி அவர்களுக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகர் விருது மகாராஜா படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதி பெற்றுக்கொண்டார். இருவருக்கும் தலா ரூ.50ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.
சிறந்த இசையமைப்பாளர் விருது அமரன் படத்திற்காக ஜிவி பிரகாஷ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. நம்பிக்கை நடிகருக்கான விருது நடிகர் அர்ஜுன் தாஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 22வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்ட படங்களில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது வாழை திரைப்படத்தில் நடித்த பொன் வேலுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த துணை நடிகைக்கான விருது வேட்டையன் திரைப்படத்தில் நடித்திருந்த துஷாரா விஜயனுக்கு வழங்கப்பட்டது. இரண்டாவது தமிழ் சிறந்த திரைப்படம் விருது லப்பர் பந்து படத்திற்காக தமிழரசன் பச்சமுத்துவிற்கு வழங்கப்பட்டது.
சிறந்த துணை நடிகருக்கான விருது லப்பர் பந்து படத்திற்காக தினேஷ் பெற்றுக்கொண்டார். சிறந்த கலை இயக்குனருக்கான விருது தங்கலான் படத்திற்காக கலை இயக்குனர் மூர்த்திக்கு வழங்கப்படுகிறது. சிறந்த படத்தொகுப்பு விருது மகாராஜா படத்திற்காக பிலோமின் ராஜ் பெற்றுக்கொண்டார். சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்திற்கான விருது வேட்டையன் படத்திற்கு வழங்கப்பட்டது. இதனை தமிழ் குமரன் பெற்றுக்கொண்டார். பிடித்தமான(ஃபேவரைட் ஹீரோயின்) நடிகை விருதுக்கு கொட்டுக்காளி படத்தில் நடித்த அன்னா பென் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது அவருக்கு பதிலாக படத்தின் இயக்குனர் வினோத் விருதினை பெற்றுக்கொண்டார்.
சிறந்த எழுத்தாளர் ஜூரி விருது கோழிப்பண்ணை செல்லத்துரை படத்திற்காக சீனு ராமசாமிக்கு வழங்கப்பட்டது. ஸ்பெஷல் ஜூரி விருது வாழை படத்திற்காக மாரி செல்வராஜிற்கு வழங்கப்பட்டது. தங்கலான் படத்தை இயக்கிய பா. ரஞ்சித்துக்கு சிறந்த இயக்குனருக்கான சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் நிர்வாக விருது வழங்கப்பட்டது. சமூகம் சார்ந்த சிறந்த படத்திற்கான விருது நந்தன் படத்திற்காக இயக்குனர் இரா. சரவணனுக்கு வழங்கப்பட்டது. ஸ்பெஷல் ஜூரி சிறந்த திரைப்படத்திற்கான விருது ஜமா படத்திற்கு வழங்கப்பட்டது. இதனை ஜமா படத்தின் இயக்குனர் பாரி இளவழகன் பெற்றுக்கொண்டார். ஸ்பெஷல் ஜூரி விருது போட் படத்திற்காக யோகிபாபுவிற்கு அறிவிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக இயக்குனர் சிம்புதேவன் அதனை பெற்றுக் கொண்டார். மெய்யழகன் படத்திற்காக பிடித்தமான நடிகர் பிரிவில் நடிகர் அரவிந்த்சாமி விருதினை பெற்றுக் கொண்டார்.