தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பிரபலம் உடனடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கில் நடிகர் நாகர்ஜூனா தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது. யு டியூபர் பல்லவி பிரசாந்த் என்பவர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றார். நிகழ்ச்சி முடிந்து ஸ்டுடியோவை விட்டு அவர் வஎளியே சென்ற போது, அவருடைய ரசிகர்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ரன்னர் அப் வின்னரின் கார், இதர போட்டியாளர்களின் கார்கள், மற்றும் அரசு பேருந்துகளை அடித்து நொறுக்கி கடுமையாக சேதப்படுத்தினர். இந்த விவகாரம் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது.
பல்லவி பிரசாந்த் மீதும் அவரது ரசிகர்கள் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. நேற்று பல்லவி பிரசாந்த்தையும் அவரது தம்பி மகாவீர் என்பவரையும் தெலங்கானா சித்திபேட் மாவட்டம் கொல்கூர் என்ற அவர்களின் சொந்த ஊரில் போலீசார் கைது செய்தனர். இறுதிப்போட்டி முடிந்து வெளியே வந்தபோது, காவல் துறையின் எச்சரிக்கையயும் மீறி பல்லவியும், அவரது ரசிகர்களும் ஊர்வலம் நடத்தியது, பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட வழக்குகளின் கீழ் அவர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற உடனே, அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.