தி ராஜாசாப் படத்தின் ரிலீஸ் மீண்டும் மீண்டும் தள்ளிப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களின் மூலம் இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருப்பவர் நடிகர் பிரபாஸ். அதைத் தொடர்ந்து இவர், பான் இந்திய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான சலார், கல்கி 2898AD ஆகிய படங்கள் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை பெற்றன. மேலும் இவர், ஸ்பிரிட், சலார் 2, கல்கி 2898AD -2 போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இது தவிர சீதாராமம் பட இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இவர், தி ராஜாசாப் எனும் திரைப்படத்தில் நடிக்கிறார். மாருதி இயக்கும் இந்த படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. தமன் இதற்கு இசையமைக்கிறார். காமெடி கலந்த ஹாரர் ஜானரில் உருவாகும் இந்த படத்தில் பிரபாஸுடன் இணைந்து மாளவிகா மோகனன், நிதி அகர்வால், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படம் 2025 ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் என ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் 2025 டிசம்பர் 5இல் உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ‘தி ராஜாசாப்’ படத்தின் ரிலீஸ் 2026 பொங்கலுக்கு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாகவும் பேச்சு அடிபட்டது. ஆனால் இதன் படப்பிடிப்பு மீண்டும் நடத்தப்படுவதால் இந்த படம் பொங்கல் ரேஸில் இணையாது என்றும் 2026 ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் பிரபாஸ் ரசிகர்களுக்கு சற்று அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.