2025 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வணங்கான், கேம் சேஞ்சர், நேசிப்பாயா, மெட்ராஸ்காரன் போன்ற பல படங்கள் திரைக்கு வந்தது. அதேசமயம் கடந்த ஜனவரி 12 அன்று மதகஜராஜா திரைப்படம் வெளியானது. இந்த படம் கடந்த 2013ஆம் ஆண்டிலேயே பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கிட்டத்தட்ட 12 வருடங்களாக இந்த படம் ரிலீஸ் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் இத்தனை வருடங்களுக்கு பிறகு திரைக்கு கொண்டுவரப்பட்ட இந்த படம் திரையரங்குகளில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது. இந்த படத்தை ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரிக்க சுந்தர். சி இந்த படத்தை இயக்கியிருந்தார். இதில் விஷால் கதாநாயகனாக நடிக்க சந்தானம் நகைச்சுவை நடிகராக நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
காமெடி கலந்த கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதன்படி இந்த படத்திற்கு கிடைக்கும் ஆதரவும் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இந்த படம் பல திரையரங்குகளில் ஹவுஸ் புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே பொங்கல் தினத்தை முன்னிட்டு பல படங்கள் வெளியாகி இருந்தாலும் மதகஜராஜா திரைப்படம் தான் பொங்கல் வின்னர் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய சுந்தர். சி, மதகஜராஜா படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து தனக்கு இரண்டு நாட்களாக ஆனந்த கண்ணீர் வந்ததாகவும் பொங்கலுக்கு வெளியான அனைத்து படங்களும் வெற்றி பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் மதகஜராஜா திரைப்படத்தினை மூன்று மாதங்களுக்கு முன்னரே திரையிட திட்டமிட்டிருந்ததாகவும் 2025 பொங்கலுக்கு தொடர் விடுமுறை இருப்பதன் காரணமாக ரிலீஸ் தேதியை மாற்றியதாகவும் கூறியுள்ளார்.
- Advertisement -