பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் தனது அண்ணன் இளையராஜாவும், வைரமுத்துவும் பிரிவதற்கான காரணம் குறித்து பேசி உள்ளார்.
கடந்த 1980 காலகட்டத்தில் இசைஞானி இளையராஜாவும், கவிப்பேரரசு வைரமுத்துவும் இணைந்து பணியாற்றினார்கள். இருவரும் இணைந்து கொடுத்த பாடல்கள் மிகவும் பிரபலமாகின. எனவே இளையராஜா – வைரமுத்து கூட்டணியை ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர். ஆனால் 1986 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான புன்னகை மன்னன் படத்திற்கு பின்னர் இளையராஜாவும், வைரமுத்தவும் பிரிந்தனர். இருவரும் இணைந்து கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் இவர்கள் இருவரும் பிரிந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. அன்று முதல் இன்று வரை இருவரையும் சேர்த்து பொது இடங்களில் கூட பார்க்க முடியாது. ஒரு காலத்தில் வெற்றி கூட்டணியாக வலம் வந்த இவர்கள் இருவரும் பிரிய காரணம் என்ன? என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் தான் சென்னையில் நடந்த ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’ பட விழாவில் கலந்து கொண்ட கங்கை அமரன், இளையராஜாவும் வைரமுத்துவும் பிரிந்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். அதன்படி அவர், “வைரமுத்து பல இடங்களில் இளையராஜா வளர்ந்ததற்கு என்னுடைய பாடல் வரிகள் தான் காரணம் என்று பேசுவார். இந்த விஷயத்தை நான் என் அண்ணனிடம் சொன்னபோது அவர் நம்பவில்லை. ஆனால் ஆதாரப்பூர்வமாக அவர் தெரிந்து கொண்ட பிறகு தான் இளையராஜாவிற்கும் வைரமுத்துவிற்கும் இடையில் விரிசல் ஏற்பட்டது. இந்த விஷயத்தை என் அண்ணன் எங்கேயுமே சொன்னதில்லை. ஆனால் நான் ஒரு ஓட்ட வாய் அதனால் தான் சொல்லிவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.