நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இந்தியன் 2, கல்கி 2898AD போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். அதே சமயம் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். கமல்ஹாசனின் 234 வது திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் கமல்ஹாசன் தான் தயாரிக்கிறார். படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து துல்கர் சல்மான், ஜெயம் ரவி, திரிஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாக ஆரம்பத்தில் அறிவிப்பு வெளியானது. ஆனால் ஒரு சில காரணங்களால் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் ஆகியோர் படத்திலிருந்து விலக அவர்களுக்கு பதிலாக அசோக் செல்வன் மற்றும் சிம்பு ஆகியோர் களத்தில் இறங்கியுள்ளனர். இதில் சிம்பு, கமல்ஹாசனுக்கு மகனாக நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்து சில தினங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே புதுடில்லியில் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் சமீபத்தில் படக்குழுவினர் சென்னை திரும்பினர். தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு நாளை சென்னையில் நடைபெற இருப்பதாகவும் 17 நாட்கள் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் சென்னையில் நடைபெற உள்ள படப்பிடிப்பில் கமல்ஹாசன், சிம்பு, அசோக் செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆகவே தக் லைஃப் படமானது இந்த ஆண்டு இறுதியில் திரையிடப்பட முழு வீச்சில் தயாராகி வருகிறது.