‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பட இயக்குனரின் திருமண புகைப்படம் வைரலாகி வருகிறது.
சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே மாதம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் ஒரு குடும்பம் பல சிக்கல்களை கடந்து தங்களின் வாழ்க்கையை எப்படி தொடங்குகிறது? என்பதை காமெடி மற்றும் எமோஷனல் கலந்த கதைக்களத்தில் கொடுத்திருந்தார் அபிஷன்.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிடிவ்வான விமர்சனங்களை பெற்று பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளையும் பெற்றது. இதைத் தொடர்ந்து அபிஷன் என்ன படம் இயக்குவார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில், அபிஷன் புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கிடையில் டூரிஸ்ட் ஃபேமிலி படம் தொடர்பான நிகழ்ச்சியின் போது, இயக்குனர் அபிஷன் தனது காதலி அகிலாவிற்கு திருமண ப்ரோபோஷல் செய்தார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வந்தது.
அதன்படி அபிஷன், தனது காதலி அகிலாவை (அக்டோபர் 31) இன்று சென்னையில் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருவதோடு அபிஷனுக்கு பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


