உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய திரைப்படம் மாமன்னன்.
இந்த படத்தில் வடிவேலு, பகத் பாஸில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அரசியல் சாதிய ஒடுக்குமுறை குறித்து பேசப்படும் இந்த படத்தில் வடிவேலு மாமன்னனாக நடித்துள்ளார். தற்காப்பு கலை பயிற்றுவிக்கும் இளைஞனாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். கம்யூனிஸ்ட் ஆக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். தன்னைவிட கீழானவர்களிடம் ஒருபோதும் தோற்று விடக்கூடாது என்ற முனைப்போடு திரியும் வில்லனாக பகத் பாஸில் நடித்துள்ளார்.
இந்த படம், அரசியலில் ஆதிக்க வர்க்கத்தினர் ஒடுக்கப்பட்டவர்களிடமிருந்து உரிமைகளை எப்படி பறிக்க எண்ணுகிறார்கள் என்ற கதை களத்தில் நகர்கிறது.

இந்த படம் நேற்றைய முன் தினம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தின் முதல் காட்சியை படக்குழுவுடன் இணைந்து பார்த்த உதயநிதி ஸ்டாலின், “ஆறு மாத கால உழைப்பை மக்கள் வரவேற்று கொண்டாடுவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. ஒரே படத்தில் நாட்டையே பிரித்து விடுவேன் என்று சொல்ல வரவில்லை. இந்த படத்தின் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறேன். படத்தில் உள்ள கருத்துக்கள் மக்களை போய் சேர வேண்டும். மாமன்னன் தான் கடைசி படம்” என்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.