நடிகர் வடிவேலு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் ஒரு நடிகரும், தயாரிப்பாளரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ஆதவன் திரைப்படத்தை தயாரித்ததன் மூலம் அந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தில் மூலம் கதாநாயகனாக திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். கெத்து, மனிதன், நிமிர், கண்ணே கலைமானே, நெஞ்சுக்கு நீதி என பல படங்களில் நடித்து பெயர் பெற்றார். கடைசியாக இவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது, அரசியல்வாதியாக மாறிவிட்டதால் இனி படங்களில் நடிக்க மாட்டேன் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக உருவெடுத்துள்ளார். எனவே ரசிகர்களும் திரை பிரபலங்களும் உதயநிதி ஸ்டாலினுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு தந்தையாக நடித்திருந்த வடிவேலு, மதுரை சென்றிருந்தபோது உதயநிதியை நேரில் சந்தித்து துணை முதல்வராக பொறுப்பேற்றுவதற்காக அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.