நடிகர் விஜய் சேதுபதி, 96 பார்ட்- 2வில் நடிக்க மருந்ததாக பரவி வரும் தகவலுக்கு இயக்குனர் பிரேம்குமார் விளக்கம் தந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 96 படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரேம்குமார். இவருடைய முதல் படமே இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்று தந்தது. ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் இடம்பெறும் படங்களுக்கு மத்தியில் மென்மையான காதல் கதையை கொடுத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார் பிரேம்குமார். அந்த வகையில் 96 திரைப்படம் என்றாலே ராம் – ஜானு என்ற பெயர்களும், விஜய் சேதுபதி – திரிஷாவும் தான் நம் நினைவுக்கு வருவார்கள். இந்நிலையில் தான் 96 பார்ட் 2 திரைப்படத்தில் நடிக்க விஜய் சேதுபதி பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்பதால் இயக்குனர் பிரேம்குமார், நடிகர் பிரதீப் ரங்கநாதனை அணுகியதாக பல தகவல்கள் சமீப காலமாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இயக்குனர் பிரேம்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தொடர்பாக விளக்கம் தந்துள்ளார். அதன்படி அவர், “இது வழக்கம் போல் ஒரு தவறான செய்தி. 96 படத்தில் நடித்த நடிகர்களை வைத்து மட்டும்தான் 96 – 2 எடுக்க முடியும். நடிகர் திரு. பிரதீப் ரங்கநாதன் அவர்களை நான் அணுகியது முற்றிலும் வேறு ஒரு கதைக்கு. அதற்கும் 96- 2 படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாளுக்கு நாள் பெருகிவரும் தீங்கு விளைவிக்கும் இந்த பொய் செய்திகளை கையாள்வது மிகவும் கடினமாக இருக்கிறது. இதன் மூலம் உண்மையை சொல்ல அறம் சார்ந்த அச்சு மற்றும் ஊடக நண்பர்களை மீண்டும் நாடுகிறேன்” என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களை பெருமூச்சு விட வைத்துள்ளது.