விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப் கூட்டணியின் ‘மகாராஜா‘ படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர். இவர் ஹீரோவாகவும் வில்லனாகவும் கலக்கி வருகிறார். அந்த வகையில் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இவர் விடுதலை 2, ட்ரெயின், ஏஸ் போன்ற பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் விஜய் சேதுபதி மகாராஜா எனும் புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாகும். இப்படத்தை விதார்த் நடிப்பில் வெளியான குரங்கு பொம்மை பட இயக்குனர் நிதிலன் சாமிநாதன் இயக்கியுள்ளார். இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க அஜனிஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். இதில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அனுராக் காஷ்யப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து பாரதிராஜா, அம்மு அபிராமி, மம்தா மோகன் தாஸ், நட்டி நட்ராஜ் என பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து தற்போது படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் மகாராஜா படத்தின் டிரைலர் குறித்த அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி இந்த படத்தின் டிரைலர் (நாளை) மே 30ஆம் தேதி மாலை 5 மணி அளவில் வெளியாகும் என்று புதிய போஸ்டர் ஒன்றின் மூலம் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தை 2024 ஜூன் 14இல் வெளியிட பட குழுவினர் திட்டமிட்டு வருவதாக செய்திகள் பரவி வருகிறது. ஆகையினால் ரிலீஸ் தேதியை ட்ரெய்லரிலேயே அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.