தமிழ் சினிமாவில் தற்போது ஹீரோவாக, வில்லனாக, கேமியோவாக என பல அவதாரங்களில் ஓய்வின்றி ஓடிக் கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் ஹிந்தி படங்களிலும் வில்லனாகவும் மிரட்டி வருகிறார். சமீபத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக இவர் நடித்த ஜவான் திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்தது. பெரிய படங்கள் மட்டுமின்றி விஜய் சேதுபதி அவ்வப்போது நல்ல தரமான சிறிய பட்ஜெட் படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் காக்கா முட்டை படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி போன்ற படங்களில் நடித்திருந்தார். வெறுமனே நடித்திருந்தார் என்று கூறுவதை விட வாழ்ந்திருந்தார் எனக் கூறுவது பொருத்தமாக இருக்கும். அந்த அளவுக்கு ஆண்டவன் கட்டளையில் புலம்பெயர் தொழிலாளர்களின் வலியையும், கடைசி விவசாயியில் மனநலம் பாதிக்கப்பட்டவராக மிக நேர்த்தியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.இவ்விரு படங்களும் விமர்சகர்கள் மத்தியில் வைர கிரீடத்தைச் சூட்டிக்கொண்டது.
இத்தகைய விஜய் சேதுபதி-மணிகண்டன் காம்போ மீண்டும் ஒரு வெப் சீரிஸுக்காக இணைந்துள்ளது. “காத்தான்” எனும் பெயரில் இந்த வெப் சீரிஸ் உருவாகி வருவதாகவும், பிரபல ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்காக இந்த வெப் சீரிஸ் உருவாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே இந்த வெப் சீரிஸின் பாதி படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்ட நிலையில் மீதமுள்ள படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த வெப் சீரிஸும் ஒரு சமூக அக்கறை கொண்ட கதையம்சமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாக உள்ளன.
- Advertisement -