பிரபல நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். விஜயகாந்தின் மறைவு தமிழகத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தன்னலம் கருதாத பொதுநலவாதியாக வாழ்ந்து மறைந்த விஜயகாந்த் மறைவு தமிழகத்திற்கு பெரும் பேரிழப்பாக அமைந்தது. இந்நிலையில் விஜயகாந்தின் மறைவிற்கு பல்வேறு பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் ரசிகர்களும் தொண்டர்களும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வந்தனர். கருப்பு வைரமாய் மக்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்த விஜயகாந்த் விதையாய் விதைக்கப்பட்டார்.
அதே சமயம் நடிகர் கார்த்தி, சூர்யா, சிவகுமார் ஆகியோர் விஜயகாந்த் மறைவின்போது வெளிநாட்டில் இருந்த காரணத்தால் அவர்களால் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. அதனால் கோயம்பேடு தேமுதிக தலைமையகத்தில், விஜயகாந்த் நினைவிடத்தில் சிவகுமார், கார்த்தி ஆகியோர் சென்னை திரும்பியவுடன் விஜயகாந்த்திற்கு நேரில் சென்று சூடமேற்றி அஞ்சலி செலுத்தினார்கள். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கார்த்தி, ” ஒரு தலைவன் எப்படி வழி நடத்த வேண்டும், இறங்கி வேலை செய்ய வேண்டும் என்பதை கேப்டனை பார்த்து தான் கற்றுக் கொண்டேன். நடிகர் சங்கத்தில் பெரிய சவால்களை சந்திக்கும் போது கேப்டனை தான் நினைப்போம். கேப்டனின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாதது என் வாழ்நாள் குறையாக நினைக்கிறேன்” என கண்ணீர் மல்க வருத்தம் தெரிவித்து பேசி உள்ளார்.

மேலும் வருகின்ற ஜனவரி 19ஆம் தேதி நடிகர் சங்கத்தின் சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்தக் கூட்டத்தில் விஜயகாந்தின் புகழ் நிலைத்து நிற்கும்படி அறிவிப்பு ஒன்றை வெளியிடுவோம் என்றும் கூறியுள்ளார்.