Homeசெய்திகள்க்ரைம்அரசு வேலை, போலி பணி நியமன ஆணை வழங்கி ரூ.1.47 கோடி மோசடி - இன்ஸ்பெக்டர்...

அரசு வேலை, போலி பணி நியமன ஆணை வழங்கி ரூ.1.47 கோடி மோசடி – இன்ஸ்பெக்டர் மீது அதிரடி நடவடிக்கை

-

அரசு வேலை, போலி பணி நியமன ஆணை வழங்கி ரூ.1.47 கோடி மோசடி - இன்ஸ்பெக்டர் மீது அதிரடி நடவடிக்கை

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 1 கோடியே 47 லட்சம் ரூபாய் மோசடி செய்த சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஏசுராஜசேகரன் மீது குமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் லலிதா (43). இவர் கணவர் மற்றும் 2 குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தேனி மாவட்டம் பழனி பகுதியை சேர்ந்த காவல் ஆய்வாளர் ஏசுராஜசேகரன் என்பவர் 2022 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையில் காவல் ஆய்வாளராக பணி மாறுதல் பெற்று பணியாற்றி வருகிறார். இவருக்கு துர்க்கா என்ற மனைவியும் உள்ளார்.

இந்நிலையில் ஆய்வாளர் ஏசுராஜசேகரன் மற்றும் அவரது மனைவி கன துர்க்கா ஆகியோர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள லலிதா வீட்டின் அருகே குடிவந்துள்ளனர். காலப்போக்கில் லலிதா குடும்பத்திற்கும் ஆய்வாளர் குடும்பத்திற்கும் பழக்கம் ஏற்பட்டு நெருக்கமாக இருந்து வந்திருக்கின்றனர்.

இந்நிலையில் லலிதாவின் மகன் விஷால் கடந்த 2022 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பில் 2 பாடத்தில் தோல்வி அடைந்துள்ளார். இதை லலிதா ஆய்வாளரிடம் கூற ஆய்வாளர் தன் மனைவி கனதுர்கா பள்ளிகல்வித் துறையில் இணை இயக்குநராக பணியாற்றி வருவதாகவும் உங்கள் மகன் விசாலுக்கு திருநெல்வேலி அரசு பள்ளியில் இளநிலை உதவியார் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்தைகள் கூறி உள்ளார். மேலும் அங்கே 10 ஆசிரியர் பணியிடமும் இளநிலை உதவியாளர் 50 பணியிடமும் காலியாக இருப்பதாக ஆய்வாளர் ஏசுராஜசேகரன் கூறியுள்ளார்.

இதனை நம்பி லலிதா தனது சொந்தக்காரர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் வேலை இருப்பதாக கூறி அவர்களிடமிருந்து சுமார் ஒரு கோடியே 47 லட்சம் ரூபாய் வசூலித்து காவல் ஆய்வாளரிடம் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் ஆய்வாளர் ஏசுராஜசேகரன் மதுரைக்கு பணியிட மாறுதலாக சென்றுவிட்டார்.

இதனிடையே வேலைக்கு பணம் கொடுத்த நபர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது ஆய்வாளர் தனது தொலைபேசி அழைப்பை துண்டித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2023 வது ஆண்டு போலி பணி நியமன ஆணையை பணம் கொடுத்தவர்கள் வீடுகளுக்கு தபால் மூலம் ஆய்வாளர் ஏசுராஜசேகரன் அனுப்பி உள்ளார். இது போலி பணி நியமன ஆணை என்று லலிதா கண்டுப் பிடித்துள்ளார். இதுகுறித்து ஆய்வாளரிடம் கேட்டபோது லலிதாவை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து லலிதா கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆய்வாளர் ஏசுராஜசேகரன் மீது புகார் கொடுத்திருக்கிறார். இந்தப் புகாரை எஸ்பி மாவட்ட குற்ற பிரிவிற்கு அனுப்பி விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டிருக்கிறார். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் லலிதா கொடுத்த புகாரின் பேரில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஏசுராஜசேகரன் மற்றும் அவரது மனைவி கன துர்கா ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலை வாங்கித் தருவதாக காவல் ஆய்வாளரே பொதுமக்களை ஏமாற்றிய சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

MUST READ