Homeசெய்திகள்க்ரைம்வடலூரில் 56 பவுன் தங்க நகை கொள்ளை - நான்கு பேர் கைது

வடலூரில் 56 பவுன் தங்க நகை கொள்ளை – நான்கு பேர் கைது

-

- Advertisement -

வடலூரில் பூட்டியிருந்த வீட்டில்  பூட்டை உடைத்து 56 பவுன் தங்க நகைகளை திருடிய நான்கு பேர் கைது அவர்களிடமிருந்து 53 சவரன் தங்க நகைகள் பறிமுதல்.வடலூரில் 56 பவுன் தங்க நகை கொள்ளை - நான்கு பேர் கைதுகடலூர் மாவட்டம் வடலூர் என்எல்சி ஆபீஸ் நகர் முருகன் சாலையை சேர்ந்த கண்ணன் என்பவரின் மனைவி பார்வதி வயது 52; இவர் தனியாக வீட்டில் வசித்து வருகிறார். இவருடைய கணவர், மகன் மற்றும் மருமகள் 3 பேரும் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் இவருடைய மருமகள் வளைகாப்பிற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20 ம் தேதி வீட்டை பூட்டை விட்டு சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்.  இந்நிலையில் இதனை நோட்டமிட்டுக் கொண்டிருந்த மர்ம நபர்கள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிச் சென்றுள்ளனர். மறுநாள் காலையில் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருந்துள்ளது. இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் வீட்டின் பூட்டை உடைத்து திருடு போன தகவலை சிங்கப்பூரில் உள்ள பார்வதிக்கு 30ம் தேதி செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பார்வதி பதறிப் போய் சிங்கப்பூரிலிருந்து மறுநாள் வடலூர் வந்து வீட்டிற்கு சென்று பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த தங்க டாலர் செயின் 12.5,  ஆரம் 10 பவுன், தோடு 6 பவுன், தங்க வளையல் 9 பவுன்,  தங்க கை செயின் 2 பவுன், தங்க கை வாட்ச் 2.5 பவுன், நவரத்தின கல் மோதிரம் 1 பவுன்,  தங்க காசு மாலை 9 பவுன், மோதிரம் 3 கிராம், கல்பதித்த மோதிரம் 1 பவுன், தங்க காசு 2 கிராம், நெக்லஸ் 3 பவுன், தொங்கல் 1 பவுன் என 56 பவுன் தங்க நகைகள்,வெள்ளி முத்து பதித்த மோதிரம்,வெள்ளி காசு 20 கிராம், வெள்ளி குங்குமச்சிமிழ் 20 கிராம்,வெள்ளி கொலுசு 120 கிராம், 5 பித்தளை குத்துவிளக்கு 23 கிலோ எடை கொண்ட பொருட்கள் என சுமார் 35 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடு போயிருந்தது தெரிய வந்தது.

இது குறித்து வடலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் இதனையடுத்து கைரேகை நிபுணர்களை வரவைத்து தடயங்களை சேகரித்தனர். பின்னர் இது குறித்து பார்வதி வடலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் இரண்டு தனி படைகள் அமைத்து குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் நெய்வேலி டிஎஸ்பி தலைமையில் வடலூர் இன்ஸ்பெக்டர் உதயகுமார், சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜாங்கம், அழகிரி மற்றும் போலீசார் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன் அடிப்படையில் நடுவீரப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் ரஞ்சித் 24; தனுஷ் மகன் சாய் குமார் 24; கிருஷ்ணமூர்த்தி மகன் மதியழகன் 23; கணேசன் மகன் ரவிச்சந்திரன் 20; ஆகிய நான்கு நபர்களை உளுந்தூர்பேட்டையில்  பிடித்து வடலூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் பார்வதியின் வீட்டில் 56 சவரன் தங்க நகைகளை திருடியது தெரியவந்தது.

இதையடுத்து நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 53 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ரஞ்சித் மீது நெய்வேலி தெர்மல், சேலம், பெங்களூர்,உளுந்தூர்பேட்டை, நடுவீரப்பட்டு ஆகிய காவல் நிலையங்களில் கஞ்சா, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இதேபோல் சாய்குமார் மீதும் நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் நான்கு வழக்குகளும் பாண்டிச்சேரி பாகூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது. மதியழகன், ரவிச்சந்திரன் ஆகிய இரண்டு பேர் மீதும் நடுவீரப்பட்டு, உளுந்தூர்பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடப்பட்டது. மேலும் இவ்வழக்கில் குற்றவாளிகளை பிடித்த காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  பாராட்டினார்.

மதுராந்தகம் அருகே வீடு புகுந்து கொள்ளையடிக்க முயற்சி – ஏரியில் குதித்து சிக்கிய இருவர்!

MUST READ