ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெயரைக் கூறி மிரட்டிய 7 பேர் கைது
கள்ளக்குறிச்சியை சேர்ந்த நபரிடம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக கூறி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம். செங்கம் தாலுகாவைச் சேர்ந்த பாபு (எ) டில்லிபாபு (55) என்பவர் கடந்த 17ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், பெர்படா குறிச்சியைச் சேர்ந்த வெங்கடேஷ் பெருமாள் என்பவரை செல்போனில் தொடர்பு கொண்டு ஹரிஷ் மற்றும் அனிஷ் ஆகியோருக்கு தர வேண்டிய பணத்தை உடனடியாக கொடுத்துவிடு. நான் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். இல்லையெனில் உன்னை என்ன செய்வேன் என தெரியாது என்று மிரட்டியுள்ளார்.
இது குறித்து வெங்கடேஷ் பெருமாள், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, டில்லிபாபு என்ற நபர் இங்கு வேலை செய்யவில்லை எனவும்,தங்களது நிறுவனத்தின் பெயரை தவறுதலாக யாரோ பயன்படுத்தி மிரட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஸ்டுடியோ இயக்குநர் சரவணமுத்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் டில்லிபாபு மீது மோசடி மற்றும் மிரட்டுதல் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர்.
அப்போது தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்களான ஹரிஷ் (எ) சீனிவாசன் (27) மற்றும் அனிஷ் (எ) ஜெகநாத் அனிஷ் (24 ) ஆகியோருக்கு கள்ளக்குறிச்சியை சேர்ந்த வெங்கடேஷ் பெருமாள் என்பவர் பல லட்சம் பணம் தர வேண்டியுள்ளது. இதனால் ஹரிஷ் மற்றும் அனிஷ் ஆகியோர் மஞ்சுநாதன் என்பவர் உதவியுடன். பாபு (எ) டில்லிபாபு என்பவர் தான் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும், ஹரிஷ் மற்றும் அனிஷ் ஆகியோருக்கு தர வேண்டிய பணத்தை உடனே தர வேண்டும் என்று வெங்கடேஷ் பெருமாளை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டியது தெரியவந்துள்ளது.
ரெட்ஜெயண்ட் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாக கூறி, நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி, மிரட்டல் விடுத்த செங்கம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த பாபு (எ) டில்லி பாபு தஞ்சாவூரைச் சேர்ந்த ஹரிஷ் அனிஷ், சிதம்பரம், மணிகண்டன் செங்கத்தைச் சேர்ந்த மஞ்சுநாதன்,ராமதாஸ் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.