தென்னிந்திய நடிகர் அல்லு அர்ஜுனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நம்பள்ளி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கிய பெண் இறந்த வழக்கில் அல்லு அர்ஜுனை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மறுபுறம் அல்லு அர்ஜுனின் மனுவும் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
விசாரணை நீதிமன்றம் அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய பிறகு, தெலுங்கானா உயர்நீதிமன்றம் அவர் மீது பதிவு செய்யப்பட்ட எப்ஐஆரை ரத்து செய்யுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ரிமாண்ட் தொடர்பான கோப்புகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது, உயர்நீதிமன்றம் என்ன முடிவெடுக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். புஷ்பா-2 படத்தின் பிரீமியர் காட்சியின் போது அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்தபோது, ஏராளமான ரசிகர்கள் அங்கு வந்ததால் நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது மகனும் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, புகாரின் பேரில் அல்லு அர்ஜுன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
அல்லு அர்ஜுன் வீட்டின் அருகே கைது செய்யப்பட்டதில் இருந்து, நாம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது வரை அனைத்தும் சஸ்பென்ஸாகவே தொடர்ந்தது. இந்த சம்பவங்களை கருத்தில் கொண்டு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
மறுபுறம், அல்லு அர்ஜுன் தொடர்பான விவகாரம் குறித்து தெலங்கானா முதல்வர் பதிலளித்துள்ளார். சட்டத்தின் முன் அனைவரும் சமம். இந்த விஷயத்தில் சட்டம் தன் கடமையை செய்யும். இதில் யாருடைய தலையீடும் இருக்காது’’என்றார்.
அல்லு அர்ஜுன் கைதுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அல்லு அர்ஜுன் மீதான அரசின் அணுகுமுறை சரியல்ல. அவரை சாதாரண குற்றவாளியாகக் கருதுவதும் சரியல்ல. அல்லு அர்ஜுன் கைதுக்கு மாநில அரசுதான் பொறுப்பு. கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமானது. கூட்ட நெரிசலுக்கு அரசின் தோல்வியே காரணம்’’ என்று பிஆர்எஸ் செயல் தலைவர் கே.டி.ஆர் குற்றம் சாட்டினார்.
சந்தியா தியேட்டர் நெரிசல் விவகாரத்தில் அல்லு அர்ஜுனும் உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். காவல்துறை தாக்கல் செய்த எஃப்ஐஆரை அவசரமாக விசாரிக்க வேண்டும். அதை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி அல்லு அர்ஜூன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அல்லு அர்ஜுன் மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.