கரூரில், நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அபிநயா டெக்ஸ் ரவி செல்வன் என்பவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று நள்ளிரவு 2 மணியளவில் கோவையில் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம் தென்னிலை ஊராட்சி நல்லிபாளையம் கிராமத்தில் சுப்பராய கவுண்டர் வாரிசுதாரர்களான அர்ஜுனன், பாப்பாத்தி, சரஸ்வதி ஆகிய மூவருக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலத்தை கடந்த 2008- ல் போலியான ஆவணங்கள் மூலம் அர்ஜுனனிடம் மட்டும் கையெழுத்து வாங்கிக்கொண்டு இந்த சொத்தை சட்ட விரோதமாக ரவி செல்வன் அபகரிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அரசு முத்திரைத்தாள் என்பது 2007 செப்டம்பர் மாதத்தில் வெளியிடுகிறது. ஆனால் 2007 ஏப்ரல் மாதமே முத்திரைத்தாளில் கிரையம் செய்ததாக போலியான ஆவணம் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் பாப்பாத்தி, சரஸ்வதி என 2 பங்குதாரர்கள் இருக்கும் போது அவர்கள் அனுமதி இல்லாமல் முழு சொத்தையும் அபகரிப்பு செய்ததது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இதையடுத்து கடந்த 2022 டிசம்பர் மாதம் சரஸ்வதி அளித்த புகாரியின் அடிப்படையில் ரவிசெல்வன் மீது நில மோசடி வழக்கு கரூர் குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்யப்படுகிறது. இதையடுத்து ரவிசெல்வனை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று நள்ளிரவு கோவையில் கரூர் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி சுகுமாரன் தலைமையிலான போலீசார் ரவி செல்வனை கைது செய்து உள்ளனர்.


