சென்னை மதுரவாயில் அருகே 73 வயது முதியவரின் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக அளித்த புகாரில் அதிமுக முன்னாள் எம்எல்ஏவின் தம்பி உட்பட 15 பேர் மீது மதுரவாயல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை பாலவாக்கம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் 73. இவருக்கு சொந்தமான இரண்டு கிரவுண்ட் நிலம் மதுரவாயில் அஷ்ட லட்சுமி நகர் பகுதியில் உள்ளது. இவரது நிலத்தை ஒரு சிலர் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயற்சி செய்ததை அடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் நிலம் குமரேசனுக்கு சொந்தமானது என உத்தரவு வந்த நிலையில் அந்த இடத்தில் கடந்த 25 ஆம் தேதி குமரேசன் மற்றும் அவரது மகன் சுத்தம் செய்யும் பணியில் இருந்தனர்.

அப்போது அங்கு வந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ வி.என். ரவியின் தம்பியும் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர் சங்கத்தின் தலைவருமான வி.என். கண்ணன் முதியவர் நிலத்தின் கேட்டிற்கு பூட்டு போட்டு முதியவர் மற்றும் அவரது மகனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறுத்து மதுரவாயல் காவல்துறையினர் வி.என்.கண்ணன், பூங்காவனம், வனிதா, நளினி உட்பட 15 பேர் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.