சென்னை, பல்லாவரம் அடுத்த ஜமீன் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் தனியார் பள்ளியில் தாளாளராக வேலை செய்து வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். கல்லூரியில் படிக்கும் போதிலிருந்தே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடனும் கடந்த ஆண்டு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. நிச்சயதார்த்தம் முடிந்த 3 மாதங்களுக்கு பின்னர், சதீஷ்குமார் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் அவருடன் வேலைப் பார்க்கும் மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய போவதாக கூறி அப்பெண்ணை திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
திருமணத்திற்கு முன்பே இருவரும் தனிமையில் சந்தித்துக் கொண்டதாகவும் தனிமையில் சந்திக்கும்போது அதனை சதீஷ் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளதாகவும் , தற்போது அதனை வெளியிட போவதாக கூறி 20 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டுவதாக அப்பெண் தாம்பரம் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பல்லாவரம் போலீசார் சதீஷ்குமார் மீது 296(b), 115(2), 64, 318(2), 351(2) ஆகிய ஐந்து பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.