கோவையில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி குறித்து இன்ஸ்டா மூலம் அவதூறு பரப்பிய இளைஞர் கைது – 15 போலி இன்ஸ்டாகிராம் கணக்கை துவங்கி மாணவியின் நண்பருக்கு புகைப்படங்களை பகிர்ந்தது அம்பலம்!.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கணுவாய் பாளையத்தை சேர்ந்தவர் விமல்குமார் (24). ஆட்டோ ஓட்டுநர். இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் கோவை மாநகரில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வரும் கல்லூரி மாணவி ஒருவரிடம் இன்ஸ்டா மூலம் பழகி காதலித்து வந்துள்ளார்.

ஆனால் விமல்குமார் செயல்பாடுகளில் சந்தேகம் ஏற்பட்டதால் மாணவி அவருடன் பேசுவதை தவிர்த்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அடிக்கடி மாணவியை செல்போனில் அழைத்து பேச விமல்குமார் முயன்றுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த விமல்குமார், ஆண் மற்றும் பெண் என இரு பாலர்கள் பெயர்களில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்குகளை துவங்கியுள்ளார்.
பின்னர் மாணவியின் ஆண் நண்பர்கள், பெண் தோழிகள் ஆகியோரை இன்ஸ்டாவில் பின் தொடர்ந்து, அவர்களுடன் குறுஞ்செய்தி அனுப்பி பேசி வந்துள்ளார். அப்போது தான் காதலித்த கல்லூரி மாணவி குறித்து அவதூறான கருத்துக்களை பரப்பியதோடு, இருவரும் காதலித்தபோது எடுத்த புகைப்படங்களையும் விமல்குமார் பகிர்ந்துள்ளார். ஒரு கட்டத்தில் மாணவியின் அனைத்து நண்பர்களுக்கும் தனித்தனியாக இன்ஸ்டாகிராம் மூலம் விமல்குமார் மெசேஜ் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து மாணவிக்கு தெரியவரவே, அவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, போலியான இன்ஸ்டாகிராம் கணக்குகளை துவங்கி கல்லூரி மாணவி குறித்து அவதூறான கருத்துக்களையும், புகைப்படங்களையும் பரப்பி வந்த விமல் குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


