தாம்பரம் அடுத்த பெரிய நகர் பகுதியில் பொது இடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் வகையில் அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டு வந்த ‘டிப் டாப்’ வாலிபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து காவல் துறை தரப்பிலும், பொதுமக்கள் தரப்பிலும் கூறப்படுவதாவது,

அச்சத்தில் கல்லூரி மாணவிகள், சிறுமிகள்
சென்னை தாம்பரம் அடுத்த பெரிய நகர் பகுதிக்கு கடந்த பத்து நாட்களாக வாலிபர் ஒருவர் புல்லட் இருசக்கர வாகனத்தில் ‘டிப் டாப்பாக’ உடை அணிந்து வந்துள்ளார். அவர் அங்குள்ள பொது இடங்கள் என்றும் பாராமல், நடந்து செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகள் மற்றும் சிறுமிகளிடம் அநாகரிகமான முறையில் நடந்து கொண்டு, பாலியல் ரீதியான தொந்தரவுகளைக் கொடுத்து வந்துள்ளார்.
அந்த வாலிபரின் ஒழுக்கக் கேடான மற்றும் அருவருக்கத்தக்கச் செயல்களால் அப்பகுதி பெண்கள் மற்றும் சிறுமிகள் பெரும் அச்சமடைந்துள்ளதோடு, கடுமையான மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். அநாகரிகமாக நடந்துகொண்ட அந்த நபரை பொதுமக்கள் பலமுறை எச்சரித்தும், அவர் தனது செயலை நிறுத்தாமல் தொடர்ந்து அத்துமீறி வந்துள்ளார்.
போலீசில் குவிந்த புகார்
இளைஞரின் இந்தத் தொடர் அத்துமீறலால் பொறுமையிழந்த அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் ஒன்றிணைந்து, அவர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெருங்களத்தூர் பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
சிசிடிவி (CCTV) ஆய்வு – போலீஸ் உறுதி
பொதுமக்களின் புகாரைப் பெற்றுக் கொண்ட பீர்க்கன்காரணை போலீசார், சம்பவம் நடந்த பெரிய நகர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். புல்லட்டில் வந்து அநாகரிகமாக நடந்துகொள்ளும் நபர் மீது விரைவில் வழக்குப் பதிவு செய்து, பொதுமக்களுக்கும் பெண்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்துள்ளனர்.
₹10,000 கோடி மோசடி வழக்கு: நியோமேக்ஸ் இயக்குநர் சார்லஸ் கடத்தல் – 4 பேர் கைது
