கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக இந்து மக்கள் கட்சியின் தென் மண்டல தலைவர் கைது.
கல்லூரியின் பேராசிரியரின் மனைவியை கழுத்தைப் பிடித்து தள்ளி காயம் ஏற்படுத்தி உள்ளார். தற்பொழுது கல்லூரி பேராசிரியரின் மனைவி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
நெல்லை அருகே சுத்தமல்லியை சேர்ந்தவர் ராஜபாண்டியன். இவர் இந்து மக்கள் கட்சியின் தென் மண்டல தலைவராக உள்ளார். இவரிடம் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் வசிக்கும் பாலகுமார் மற்றும் அவரது மனைவி இருவரும் சேர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி அன்று 10 % வட்டிக்கு 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளனர் .
பாலகுமார் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து பாலகுமார் வட்டி கொடுத்த வந்த நிலையில் அதிக வட்டி கேட்டதாகவும், கடந்த மாதத்திற்கான வட்டி பணம் செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பாலகுமாரின் வீட்டிற்குச் சென்ற ராஜபாண்டியன் அங்கு பேராசிரியர் பாலகுமார் இல்லாததினால் அவரது மனைவி கீதாவிடம் மிகவும் அருவருக்கத்தக்க முறையில் ஆபாச வார்த்தைகளால் பேசி உள்ளார். இதனை பாலகுமாரின மனைவி தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார்.
இதனை அடுத்து ஆத்திரமடைந்த ராஜபாண்டியன் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த கீதாவின் செல்போனை பிடுங்கி அவரை தள்ளி விட்டு விட்டார். இதில் அவர் கழுத்து, முதுகு, தலை ஆகிய பகுதியில் ஊமை காயம் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து அவர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
பின்னர் கீதா பாளையங்கோட்டை போலீஸில் நடந்த சம்பவத்தை பற்றி கூறி ராஜபாண்டியன் மீது புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் போலீசார் ராஜபாண்டியன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வன்கொடுமை தடுப்புச் சட்டம், கந்துவட்டி கேட்டு மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஏற்கனவே ராஜபாண்டியின் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.