நெல்லை மாவட்டம் பழவூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் போலீஸ்காரர் அசோகன் என்பவருக்கு செக் மோசடி வழக்கில் ஒன்றரை ஆண்டு சிறை தண்டனையும் 4 லட்ச ரூபாய் அபாராதமும் விதித்து வள்ளியூர் மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்தவர் ஜான் போஸ்கோ. தொழிலதிபர். இவரிடம் கடந்த 2017ம் ஆண்டு பணகுடியை சேர்ந்த போலீஸ்காரர் அசோகன் என்பவர் செக் கொடுத்து 4 லட்ச ரூபாய் கடன் பெற்றுள்ளார். கடன் பெற்ற தொகையை போலீஸ்காரர் அசோகன் கொடுக்காமல் ஜான் போஸ்கோவே ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து ஜான் போஸ்கோ வள்ளியூர் நீதிமன்றத்தில் போலீஸ்காரர் அசோகன் மீது செக் மோசடி வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு விசாரணை வள்ளியூர் மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதி ஆன்ஸ் ராஜா செக் மோசடி செய்த போலீஸ்காரர் அசோகனுக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனையும் 4 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார். அபராத தொகை கட்ட தவறினால் கூடுதலாக நான்கு மாதம் சிறை தண்டனையும் விதித்துள்ளார். சிறை தண்டனை பெற்றுள்ள அசோகன் தற்போது பழவூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.