விசாரணை கைதிகளை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லும்போது போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் முக்கிய ரவுடி கைது. தப்பித்து ஓடும்போது கீழே விழுந்ததில் கை உடைந்தது.சென்னை மாதவரம் மில்க் காலனி பகுதியைச் சேர்ந்தவர் தலைமை காவலர் இளங்கோ 54, மற்றும் அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் காவலர் கார்த்திக் 32, இவர்கள் இருவரும் புதுப்பேட்டை ஆயுதப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த மாதம் 31ஆம் தேதி காலை 10 மணி அளவில் புதுப்பேட்டை ஆயுதப்படையில் இருந்து 30 காவலர்களுடன் விசாரணை கைதிகளை புழல் சிறையில் இருந்து அழைத்துக் கொண்டு எழும்பூரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி விட்டு இரவு 8 மணி அளவில் எழும்பூரில் இருந்து விசாரணை கைதிகளை மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துக் கொண்டு சென்றனர். அப்போது வியாசர்பாடி மூர்த்திங்கர் சாலை அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் கைதிகளிடம் கஞ்சா கொடுக்க முயற்சி செய்துள்ளனர் இதனை பார்த்த காவலர்கள் எச்சரித்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் உடனடியாக அங்கிருந்து சென்று விட்டனர். அப்போது வாகனத்தில் சென்ற கைதிகளுக்கும் ஆயுதப்படை காவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு விசாரணைக் கைதிகள் காவலர்களை மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டினர். இதனை சக காவலர்கள் தங்களது மொபைலில் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது. இதனை யடுத்து ஆயுதப்படை தலைமை காவலர் இளங்கோ எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.எம்.கே.பி நகர் போலீசார் இந்த வழக்கை விசாரித்ததில் அண்ணா நகர் பகுதியில் ராபர்ட் கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் உள்ள லோகு என்கின்ற யோகராஜ்,சங்கர்,நெப்போலியன்,விவேக் ஆகிய நான்கு பேர் இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்நிலையில் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த எம்.கே.பி நகர் போலீசார் வழக்கிற்க்கான நகல்களை தற்போது புழல் சிறையில் உள்ள சங்கர்,நெப்போலியன், விவேக் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் இதில் அயனாவரம் பச்சைக்கல் வீராசாமி ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த லோகு என்கின்ற யோகராஜ் 36 என்ற நபர் சிறையில் இருந்து ஜாமீன் பெற்று வெளியே வந்தது போலீசாருக்கு தெரிய வந்தது. இதனையடுத்து எம்கேபி நகர் போலீசார் நேற்று மாலை அவரை முல்லை நகர் சுடுகாடு அருகே மடக்கி பிடித்தனர் அப்போது போலீசாரிடமிருந்து தப்பிப்பதற்காக அவர் சுவர் ஏறி குதித்தார் இதில் அவருக்கு இடது கை உடைந்தது.

உடனே போலீசார் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று மாவு கட்டுப்போட்டனர். இதனையடுத்து லோகு என்கின்ற யோகராஜ் மீது வழக்கு பதிவு செய்த எம்.கே.பி நகர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.