Homeசெய்திகள்க்ரைம்பாலக்காட்டில் நகைக்கடையைக் கொள்ளையடித்துவிட்டு தமிழகத்துக்குத் தப்பியோட்டம் – கொள்ளையர்களை போலீசார் துரத்தும் வீடியோ வெளியீடு!

பாலக்காட்டில் நகைக்கடையைக் கொள்ளையடித்துவிட்டு தமிழகத்துக்குத் தப்பியோட்டம் – கொள்ளையர்களை போலீசார் துரத்தும் வீடியோ வெளியீடு!

-

- Advertisement -

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் துப்பாக்கி மற்றும் கத்தியைக் காட்டி நகைக்கடையில் கொள்ளையடித்துச் சென்ற மூன்று மர்ம நபர்களை, கேரள போலீசார் துரத்திச் செல்லும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.பாலக்காட்டில் நகைக்கடையைக் கொள்ளையடித்துவிட்டு தமிழகத்துக்குத் தப்பியோட்டம் – கொள்ளையர்களை போலீசார் துரத்தும் வீடியோ வெளியீடு!

கொள்ளையர்கள் தமிழகத்துக்குள் தப்பிச் சென்றிருக்கலாம் என்றும், திண்டுக்கல் பகுதியில் பதுங்கியிருக்க வாய்ப்புள்ளதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து தமிழக போலீசாரின் உதவியுடன் கொள்ளையர்களைப் பிடிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்து கொள்ளை

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பெருங்கோட்டுக்குறிச்சி பகுதியில் செயல்பட்டு வரும் தங்க நகைக்கடையில், கடந்த 27-ஆம் தேதி பிற்பகல் சுமார் 3 மணியளவில் அதன் உரிமையாளர் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது கடைக்குள் மூன்று மர்ம நபர்கள் நுழைந்துள்ளனர். முதலில் அங்கிருந்த பணியாளர்களிடம் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்த அவர்கள், திடீரென கைத் துப்பாக்கி மற்றும் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர். இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள், கடையில் இருந்த தங்க நகைகளை அள்ளிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

கொள்ளையர்களின் காரைத் துரத்திச் சென்ற போலீசார்

கொள்ளைச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கடையில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

இதையடுத்து பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகள் மற்றும் காவல் நிலையங்களுக்கும் கொள்ளையர்கள் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

அப்போது தமிழக – கேரள எல்லைப் பகுதியான கோபாலபுரத்தில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், கொள்ளையர்கள் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் காரைக் கண்டறிந்தனர். அந்தக் காரைத் தடுத்து நிறுத்த போலீசார் முயன்றபோது, தடுப்பை மீறி கார் வேகமாகச் சென்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அந்தக் காரைத் தங்களது வாகனத்தில் துரத்திச் சென்றனர். இருப்பினும், கொள்ளையர்கள் போலீசாரிடம் சிக்காமல் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

திண்டுக்கல்லில் பதுங்கியிருக்கலாம் எனச் சந்தேகம்

இதற்கிடையே, கொள்ளையர்கள் தமிழகத்துக்குள் தப்பிச் சென்று திண்டுக்கல் பகுதியில் பதுங்கியிருக்கலாம் என்ற தகவல் போலீசாருக்குக் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தமிழக காவல்துறையினருடன் இணைந்து கொள்ளையர்களைத் தேடும் பணியில் கேரள போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கெனவே நகைக்கடையில் கொள்ளை நடைபெற்றபோது பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது கொள்ளையர்கள் தப்பிச் சென்ற காரை கேரள போலீசார் துரத்திச் செல்லும் வீடியோவையும் பாலக்காடு மாவட்ட போலீசார் வெளியிட்டுள்ளனர். இந்தக் காட்சிகள் தற்போது கவனம் பெற்றுள்ளன.

பட்டப்பகலில் நகைக்கடையில் துப்பாக்கி முனையில் 47 சவரன் கொள்ளை: பொள்ளாச்சி நோக்கி தப்பிய கும்பல்!

MUST READ