கும்மிடிப்பூண்டியில் ஏடிஎம் இயந்திரத்தை வெல்டிங் கட்டரை வைத்து உடைத்து கொள்ளை முயற்சி. சிசிடிவி காட்சிகளை கொண்டு மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் எஸ்பிஐ ஏடிஎம் இயங்கி வருகிறது. நேற்று(17.03.2023) நள்ளிரவு இந்த ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்ம நபர் ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது ஏடிஎம்மில் இருந்து அலாரம் மும்பையில் உள்ள வங்கியின் தலைமையகத்திற்கு சென்றுள்ளது. உடனடியாக ஏடிஎம் அமைந்துள்ள சிப்காட் காவல் நிலையத்திற்கு வங்கியில் இருந்து அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு ரோந்து போலீசார் சென்றனர்.
போலீசார் வருவதை அறிந்த மர்ம நபர் கொள்ளை முயற்சியை கைவிட்டு முன்கூட்டியே அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்துள்ளார். தொடர்ந்து போலீசார் கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் தடயங்களை சேகரித்து விசாரணையில் ஈடுபட்டனர்.
மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தை வெல்டிங் கட்டரை வைத்து உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. ஒருவர் மட்டும் ஏடிஎம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டாரா அல்லது அருகில் கூட்டாளிகள் காத்திருந்து கும்பலாக வந்து கைவரிசை காட்டினார்களா என அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது