புழல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை 1.5 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை. மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.
சென்னை புழல் அடுத்த புத்தகரம் துரைசாமி நகரை சேர்ந்தவர் தனலட்சுமி (50). இவர் முகப்பேரில் கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தி வருகின்றார். தனலட்சுமி தமது குடும்பத்துடன் வானகரத்தில் உள்ள உறவினரின் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றுவிட்டு நேற்றிரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார்.

உள்ளே இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்து தங்க நகைகள் 20 சவரன் மற்றும் 1.5 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளை போனது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அளித்த தகவல் பேரில் புழல் போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்து விசாரணையில் ஈடுபட்டனர். இதுகுறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.