பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை என்கவுண்டர் செய்ததற்கு கேரளாவில் தமிழ்நாட்டு போலீசிற்கு பாராட்டு தெரிவித்து பேனர்கள் வைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது
கடந்த புதன்கிழமை அன்று பிரபல ரவுடியான காக்கா தோப்பு பாலாஜி வியாசர்பாடி பிஎஸ்என்எல் குடியிருப்பு பகுதியில் போலிசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். வாகன தணிக்கையின் போது விசாரித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென ஒருவர் தப்பி ஓடியதாகவும், அவரை பிடிக்க முயன்ற போது தன் கையில் உள்ள துப்பாக்கியால் போலீசை நோக்கி அந்த நபர் சுட்டுள்ளார். அப்போது போலீசார் தற்காப்புக்காக சுட்ட போது அந்த நபர் உயிரிழந்துள்ளார். அதன் பிறகு தான் விசாரணை செய்தபோது இறந்தவர் பிரபல ரவுடியான காக்காத்தோப்பு பாலாஜி என போலீசாருக்கு தெரிய வந்ததாக கூறப்படுகிறது. ரவுடி காக்கா தோப்பு பாலாஜிக்கு கொலை வழக்குகள் உட்பட 59 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
அவரோடு பயணித்த சத்தியமூர்த்தி என்பவர் 10 கிலோ கஞ்சாவை கடத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை தமிழ்நாடு காவல்துறை என்கவுண்டர் செய்ததற்கு பாராட்டு தெரிவித்து கேரளா கோழிக்கோடு மாவட்டத்தில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் பேனர்கள் வைத்து பாராட்டு தெரிவித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கேரளாவில் தமிழக காவல்துறைக்கு பேனர் வைத்தது ஏன் என விசாரணை செய்த போது பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. ரவுடி காக்கா தோப்பு பாலாஜி ஜூலை மாத காலகட்டத்தில் ஒன்றரை மாதம் கேரளா கோழிக்கோடு மாவட்டம் பெரம்பரா(perambara) பகுதியில் தலைமுறை வாக இருந்து வந்தது தெரியவந்துள்ளது. இதனை அறிந்த தமிழக தனிப்படை போலீசார் கோழிக்கோடு சென்று ரவுடி காக்கா தோப்பு பாலாஜி இருக்கும் இடத்தை மஃப்டியில் சுற்றி வளைத்துள்ளனர்.
அங்கு வீட்டின் ஒன்றில் கதவைத் தட்டி போலீசார் விசாரிக்கும் பொழுது பெண் ஒருவர் பதில் அளித்துள்ளார். வந்தவர்கள் தமிழக காவல்துறையினர் என தெரியாமல் அச்சப்பட்டு கதவை மூடி உள்ளார். காக்கா தோப்பு பாலாஜியை மறைத்து வைக்க முயல்கிறார்கள் என நினைத்து போலீசார் வீட்டில் உள்ளே செல்ல முயற்சித்துள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள கேரள மக்கள் அவர்களை சுற்றி வளைத்து பிடித்துள்ளனர். அதன்பிறகு விசாரணை செய்தபோதுதான் தமிழக காவல்துறையினர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை பிடிக்க வந்தது கேரள மக்களுக்கு தெரியவந்தது.
ரவுடி காக்கா தோப்பு பாலாஜி மீது கொலை வழக்கு உள்ளிட்ட 59 வழக்குகள் இருப்பதாக கூறி தெரிவித்ததை எடுத்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பிறகு விசாரணை செய்த போது போலீசார் காக்கா தோப்பு பாலாஜி இருக்கும் வீட்டிற்கு பதிலாக வேறு வீட்டிற்குள் நுழைந்தது தெரியவந்துள்ளது.
அருகில் ராஜேஷ் என்ற விவசாயி மூலமாக வீட்டின் ஒன்றில் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி மறைந்திருந்தது தெரியவந்துள்ளது .
காக்கா தோப்பு பாலாஜி முதலில் வந்தபோது அக்கம்பக்கத்தினர் ஆயுர்வேத சிகிச்சைக்காக வந்ததாக நினைத்துள்ளனர். ஆனால் அடிக்கடி கோழிக்கறி வாங்கிச் சென்று சாப்பிட்ட போது அங்குள்ள மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சையின் போது மாமிசம் சாப்பிடாமல் தானே இருப்பார்கள் என்று சந்தேகித்துள்ளனர். அதன் பிறகு போலீசார் வந்து ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை துப்பாக்கி முனையில் கைது செய்ய முற்பட முயன்ற போதுதான் தங்கள் பகுதியில் தங்கியிருந்தது மிகப்பெரிய ரவுடி என்பதை மக்கள் அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோழிக்கோடு பகுதியில் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி பல தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு தங்கியது தெரியவந்துள்ளது. குறிப்பாக சென்னைக்கு வந்த ராஜேஷ் என்பவர் வாலிபால் விளையாட்டு பார்க்க வந்தபோது ரவுடி காக்கா தோப்பு பாலாஜி பழக்கம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. காக்கா தோப்பு பாலாஜி மீது பல கொலை வழக்குகள் இருப்பது தெரியாமல் பழகியதாகவும் சிகிச்சை ஒன்றிற்காக நட்பின் அடிப்படையில் கோழிக்கோடு அழைத்து வந்து தங்க வைத்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும் அங்கிருக்கும் சூழல் பிடித்துப் போய் தொழில் துவங்குவதற்கான நடவடிக்கையில் ரவுடி பாலாஜி ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக போலீசார் தேடிவந்த போது பரபரப்பு ஏற்பட்ட காரணத்தினால் ரவுடி காக்கா தோப்பு பாலாஜிக்கு எப்படியோ தகவல் தெரிந்து தப்பிச் சென்றுள்ளார். மீண்டும் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி நமது பகுதிக்கு வர வாய்ப்புள்ளது என கோழிக்கோடுவில் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருந்தனர்.
இந்நிலையில் சென்னையில் தமிழக போலீசார் ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை என்கவுண்டர் செய்து சுட்டுக்கொன்ற தகவல் அறிந்து அச்சத்தில் இருந்து வெளிப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனால் ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை என்கவுண்டர் செய்து சுட்டுக்கொன்ற தமிழக காவல்துறைக்கு கேரளாவில் தலைமறைவாக இருந்த பகுதியில் பேனர்கள் வைத்து கேரள மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.