கேரளாவில் கடந்த மாதம் நகைக்கடை உரிமையாளருக்கு சொந்தமான பணம் 3 கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஜெயதாஸ் என்பவரை கும்பகோணத்தில் கேரளா காவல்துறையினர் கைது செய்தனர்.கடந்த மாதம் 13ஆம் தேதி கோவையிலிருந்து திருவனந்தபுரத்திற்கு ஒரு வேனில் நகை கடை அதிபருக்கு சொந்தமான பணம் 3 கோடி ரூபாய் கொண்டு செல்லப்பட்டது. அந்த வேனின் ஓட்டுநரை தாக்கி வேனில் கொண்டு செல்லப்பட்ட மூன்று கோடி ரூபாய் பணத்தை கும்பகோணம் மோரிஸ் நகரை சேர்ந்த மாரியப்பன் என்கிற சதீஷ் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட கும்பல் கொள்ளை அடித்ததாக கேரளா மாநிலம் கொல்லம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
கொள்ளை சம்பவத்தில் முக்கிய நபரான சதீஷ் தலைமறைவாக உள்ள நிலையில், கடந்த மாதம் இருபதாம் தேதி சதீஷ் கும்பகோணத்தில் உள்ள நண்பர் ஜெயதாஸ் என்பவருடன் பல முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உள்ளார். அதன் பின் சதீஷின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. கேரள காவல்துறையினர் இந்த தடயத்தை கொண்டு நேற்று கும்பகோணம் அஞ்சுகம் நகரைச் சேர்ந்த ஜெயதாஸ் என்பவரை கேரளா காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்காக கேரளா கொண்டு செல்ல முயன்றனர்.

அப்போது ஜெயதாஸின் நண்பர்கள், உறவினர்கள் ஜெயதாசை கேரளாவுக்கு அழைத்துச் செல்லக்கூடாது என கோரிக்கை விடுத்தனர். கேரளா காவல்துறையினர் கைது செய்யப்பட்ட ஜெயதாசை கும்பகோணம் தாலுக்கா காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கும் வந்த ஜெயதாஸின் உறவினர்கள் தாலுகா காவல் ஆய்வாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து கும்பகோணம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அங்கிட்சிங் தாலுகா காவல் நிலையத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் கேரளா காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஜெயதாஸ் கும்பகோணம் குற்றவியல் நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் ஜெயதாஸ் கைது செய்யப்பட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. அப்போது ஜெயதாஸ் தனக்கு மயக்கம் வருவதாக நீதிபதியிடம் தெரிவித்தார். அதனை தொடர்ந்து நீதிபதி ஜெயதாஸை மருத்துவமனையில் சேர்க்க உத்திரவிட்டார். இதனைத் தொடர்ந்து ஜெயதாஸ் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கேரளா காவல்துறையினர் மூன்று கோடி ரூபாய் கொள்ளை சம்பவம் தொடர்பாக கேரளாவில் ஹரி கிருஷ்ணன் என்பவரை கைது செய்து உள்ளனர். இவரிடம் வாங்கிய வாக்கு மூலத்தில், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் பெரும் பகுதி சதீஷ் ஜெயதாஸிடம் கொடுத்து வைத்திருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து கேரளா காவல்துறையினர் கும்பகோணம் அஞ்சுகம் நகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து ஜெயதாஸை கைது செய்தனர். கேரளாவில் மூன்று கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் சிலர் கும்பகோணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்ததை தொடர்ந்து இந்த சம்பவம் கும்பகோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேல்பாரி நாவல் – சாதி, மத, மொழியை கடந்து கலையை ரசிப்பவர்கள் தமிழர்கள் – நடிகர் ரஜினிகாந்த்