வாக்கிங் சென்ற பைனான்ஸ் அதிபரை மனைவியே கூலிப்படை வைத்து கொடூரமாக கொலை செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து காசிகவுண்டன்புதூர் தாமரை கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் மகன் ரமேஷ் (45), மனைவி விஜயலட்சுமி (36) மற்றும் இரு மகள்களுடன் வசித்து வந்தனர்.
ஊட்டியை பூர்வீகமாக கொண்ட ரமேஷ், வீட்டில் இருந்தபடியே கார் கன்சல்டிங் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்துவந்துள்ளார்.
இந்நிலையில், ரமேஷ் கடந்த ஒன்றாம் தேதி அதிகாலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது கோவை – சேலம் ஆறுவழிச் சாலை, மங்கலம் சாலை பைபாஸ் அருகே சர்வீஸ் சாலையில் காரில் வந்த மர்ம நபர்கள் அறிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக ரமேஷை வெட்டி விட்டு தப்பிச் சென்றனர்.
பலத்த காயத்துடன் ரத்தவெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த ரமேஷை மீட்டு கோவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வழக்கில், போலீசாரின் அதிரடி விசாரணையில் ரமேஷின் மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படை வைத்து தனது கணவரை கூலிப்படையினர் மூலமாக கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, ரமேஷின் மனைவி விஜயலட்சுமி (36) (A1), அவரது கள்ளக்காதலன், அவிநாசி, காசிகவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்த நெளசத் மகன் சையத் இர்ஃபான் (28) (A2) மற்றும் அவிநாசியை அடுத்து வெள்ளியம்பாளையம் பகுதியை சேர்ந்த செந்தில்பதி மகன் அரவிந்த் (எ) ஜானகிராமன் (27) (A3), திருவாரூர் மாவட்டம் அரித்துவாரமங்கலம் பகுதியை சேர்ந்த கந்தையன் மகன் கோபாலகிருஷ்ணன் (35), மன்னார்குடி பகுதியை சேர்ந்த ரவி மகன் அஜீத் (27), அதே பகுதியை சேர்ந்த ஜீவானந்தம் மகன் சிம்போஸ் (23), சோமு மகன் சரண் (24) மற்றும் தேனி மாவட்டம் சில்லுவார்பட்டி பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் ஜெயபிரகாஷ் (45) ஆகிய எட்டு பேரை கைது செய்தனர். அவர்களை அவிநாசி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின்படி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எட்டு குற்றவாளிகளில், சரண் என்பவர் மது போதையில் கொலைச்சம்பவம் நடக்கும் போது கொலைகாரர்களுடன் உடன் வந்து சென்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, சரண் என்பவரை தவிற ரமேஷின் மனைவி விஜயலட்சுமி உட்பட ஏழு பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையை ஏற்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறுஸ்துராஜ் கொலை குற்றவாளிகள் ஏழு பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு கோவை மத்திய சிறையில் உள்ள ஏழு பேருக்கும் இன்று காலை நேரில் வழங்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.