சிவகாசி அருகே நண்பர்களுடன் கண்மாய்க்குள் குளிக்கச் சென்ற 14 வயது பள்ளி மாணவன், எதிர்பாராதவிதமாக 20 அடி ஆழத் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். நண்பர்களுடன் சென்ற பொழுது சிவகாசியிலிருந்து சாத்தூர் செல்லும் சாலையில் உள்ள மீனம்பட்டி வடக்கூர் அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் ராஜு. இவருடைய மகன் நிக்சன் (14). இவன் சிவகாசியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தான்.


இந்நிலையில், பள்ளி விடுமுறை நாளில் நிக்சன் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள சிறுகுளம் கண்மாய்க்குக் குளிக்கச் சென்றுள்ளான். நண்பர்கள் அனைவரும் கண்மாயில் இறங்கி உற்சாகமாகக் குளித்துக் கொண்டிருந்தபோது, நிக்சன் எதிர்பாராதவிதமாகக் கண்மாயின் ஆழமான பகுதிக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
20 அடி ஆழத்தில் மூழ்கிய மாணவன்
கண்மாயில் சுமார் 20 அடி ஆழமுள்ள தண்ணீரில் சிக்கிய நிக்சன், நீந்த முடியாமல் தண்ணீரில் மூழ்கத் தொடங்கினான். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவனது நண்பர்கள் கூச்சலிட்டனர். உடனே, இச்சம்பவம் குறித்து அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறைக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கண்மாய்க்குள் இறங்கி தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தினர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, நீரில் மூழ்கிய நிக்சனை மீட்ட தீயணைப்பு வீரர்கள், அவனுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
மருத்துவர்கள் கைவிட்ட சோகம்
அதைத் தொடர்ந்து, ஆபத்தான நிலையில் இருந்த மாணவன் நிக்சனை சிகிச்சைக்காகச் சிவகாசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவசரப் பிரிவில் நிக்சனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்துப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துள்ளிக் குதித்து விளையாட வேண்டிய பள்ளி மாணவன் கண்மாய் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம், மீனம்பட்டி பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.
