கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே விசிக மாநாட்டில் பங்கேற்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய எலக்ட்ரீசியன், அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டிற்குச் சென்று திரும்பும்போது நேர்ந்த விபத்து:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த ஆர்.ஆர். குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால். இவரது மகன் ஜெயராமன் (39). எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்த இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தீவிரத் தொண்டராவார். இந்நிலையில், நேற்று உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டு நிகழ்ச்சியில் ஜெயராமன் கலந்துகொண்டார்.

மாநாடு முடிந்த பின்னர், அவர் தனது இருசக்கர வாகனத்தில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு:
வாகனம் அஜிஸ் நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ஜெயராமனின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இவ்விபத்தில் தூக்கி வீசப்பட்டுப் பலத்த காயமடைந்த அவரை, அருகிலிருந்தவர்கள் மீட்டு உடனடியாக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காகக் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து அவரது நிலைமை மோசமடைந்ததால், இன்று காலை கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் அரசுக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், ஆத்தூர் அருகே ஆம்புலன்ஸ் சென்றுகொண்டிருந்தபோதே ஜெயராமன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை:
இச்சம்பவம் குறித்து எடைக்கல் காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தையும் அதனை ஓட்டிச் சென்ற ஓட்டுநரையும் தீவிரமாகத் தேடி விசாரணை நடத்தி வருகின்றனர். விசிக தொண்டர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
