ஆத்திரமடைந்து மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டம் — லஞ்சக் குற்றச்சாட்டால் பெரும் பரபரப்பு!
கடலூர் மாநகராட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வந்த 50-க்கும் மேற்பட்ட தற்காலிக தூய்மை பரப்புரையாளர்களை நிர்வாகம் திடீரென பணிநீக்கம் செய்துள்ளது. இதனைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

10 ஆண்டு காலப் பணி — திடீர் நீக்கம்:
கடலூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மக்களிடம் குப்பைகளைப் பிரித்து வழங்குவது குறித்தும், தூய்மைப் பராமரிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் 50-க்கும் மேற்பட்ட தற்காலிக தூய்மை பரப்புரையாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மிகக் குறைந்த ஊதியத்தில் தொடர்ந்து பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், முந்தைய அறிவிப்பு எதுவும் இன்றி அவர்கள் அனைவரையும் பணியில் இருந்து மாநகராட்சி நிர்வாகம் திடீரென நீக்கியுள்ளது. மேலும், அவர்களுக்குப் பதிலாகப் புதிய நபர்களைப் பணியமர்த்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
50 ஆயிரம் ரூபாய் லஞ்சக் குற்றச்சாட்டால் பரப்பரப்பு:
முன்னதாக, பழைய பரப்புரையாளர்களை நீக்கிவிட்டுப் புதிய நபர்களைப் பணியமர்த்துவதற்காக, மாநகர நகர் நல அலுவலர் ஒருவருக்கு நபர் ஒன்றுக்கு ரூ.50,000 வரை லஞ்சம் கைமாறியதாகக் கூறி கடலூர் மாநகராட்சி சுவர்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுவரொட்டிகள் (போஸ்டர்கள்) ஒட்டப்பட்டன. இந்தச் சம்பவம் மாநகராட்சி வட்டாரத்தில் ஏற்கனவே பெரும் புயலைக் கிளப்பியிருந்தது.
ஆட்சிகள் மாறினாலும் தொடர்ந்த பணி — போராட்டத்தில் தொழிலாளர்கள் கொந்தளிப்பு:
திடீர் பணிநீக்கத்தைக் கண்டித்தும், மீண்டும் தங்களைப் பணியில் அமர்த்தக் கோரியும் பாதிக்கப்பட்ட தூய்மை பரப்புரையாளர்கள் கடலூர் மாநகராட்சி அலுவலகத்திற்குத் திரண்டு வந்து வளாகத்திலேயே உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது அவர்கள் எழுப்பிய முக்கியக் கோரிக்கைகள்:
“நாங்கள் கடந்த அதிமுக ஆட்சியிலும் தொடர்ந்து பணிபுரிந்தோம்; தற்போதைய திமுக ஆட்சியிலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினோம். ஆட்சிகள் மாறினாலும் எங்கள் சேவை தொடர்ந்த நிலையில், தற்போது எந்தக் காரணமும் இன்றி ஏன் எங்களை திடீரென்று நீக்க வேண்டும்? இந்த எளிய வேலையை மட்டுமே நம்பி எங்கள் குடும்பங்களின் வாழ்வாதாரமே உள்ளது. எனவே, எங்களை மீண்டும் உடனடியாகப் பணியில் சேர்க்க வேண்டும்.”
நகராட்சியில் பரபரப்பு:
பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், கடலூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பதற்றமும் பரபரப்பும் நிலவி வருகிறது. சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட 7 வயது சிறுமி உயிரிழப்பு!
